

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அத்திரைடிப்படை வாகனத்தை முதல் ஆளாக விஜய் ஓட்டினார்.
மேலும் இந்நிகழ்வில் பேசிய விஜய், "இந்த திட்டத்திற்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கபடுகிறது. 2,500 பணியிடம் உருவாக்கப்படும். பெண்களுக்கு குற்றம் நடக்கும் முன்னே அதை தடுக்க இந்த படை முயலும்.
டிரோன் வாயிலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். பெண்களுக்கான கண்ணியம்தான் அரசின் முக்கிய குறிக்கோள்" என தெரிவித்தார்.
இந்நிலையில் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு மக்கள் நீதி மைய தலைவர் கமல் ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது.
அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்.
அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்." என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.