என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமன், மச்சானாக பழகுகிறோம்; தீபம் ஏற்றுவதில் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை - நயினார் நாகேந்திரன்!
    X

    "மாமன், மச்சானாக பழகுகிறோம்; தீபம் ஏற்றுவதில் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை" - நயினார் நாகேந்திரன்!

    • அவர் சிறந்த மனிதர். ஆனால், அவர் ஆட்சியை அவ்வாறு கூற முடியவில்லை.
    • முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் என யாராக இருந்தாலும் தீர்ப்பை அவமதித்தவர்கள், தவறு செய்தவர்களாகவே கருதப்படுவர்.

    மதுரை தொண்டி சாலையில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில், ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து உத்தங்குடியில் நடைபெற்ற அரசு நநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஒரு லட்சத்து 211 பயனாளிகளுக்கு 174 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.

    மேலும், 3 ஆயிரத்து 65 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விழாவில் பேசிய அவர், அனைத்து மதத்தினரும் அங்காளி, பங்காளியாக பழகும் மண்ணில் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபமே ஒளிரும் என தெரிவித்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,

    "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சரை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நான் அவரை பலகோணங்களில் பார்த்துள்ளேன். என்னை பொறுத்தவரை அவர் சிறந்த மனிதர். ஆனால், அவர் ஆட்சியை அவ்வாறு கூற முடியவில்லை. அவர்கள் வேண்டுமானால் அங்காளி, பங்காளியாக இருக்கலாம்.

    நாங்கள் இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானாகத்தான் பழகுகிறோம். இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். தீர்ப்புக்கு பின் 144 தடை உத்தரவு என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் என யாராக இருந்தாலும் தீர்ப்பை அவமதித்தவர்கள், தவறு செய்தவர்களாகவே கருதப்படுவர்.

    தீபம் ஏற்றுவதால் எந்த இஸ்லாமிய பெருமக்களுக்கும் வருத்தம் இல்லை. இதற்கு எதிராக வழக்குகளும் இல்லை. தீபாவளிக்கு பிறகு பெரும்பான்மையான மக்களால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் மக்களை சந்தோஷப்படுத்துவதை விட்டுவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில்கொண்டு அங்காளி, பங்காளி என்ற வார்த்தையை வாக்குவங்கிக்காக முதலமைச்சர் பயன்படுத்துகிறார் என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவித்தார்.

    Next Story
    ×