என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய்யின் அணுகுமுறை புதிதாக உள்ளது - விமர்சித்த திருமாவளவன்
- பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.
- உயிருக்கு ஆபத்து என நினைத்து பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்னைக்கு அழைத்து பார்த்திருக்கலாம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார் விஜய்.
அனுமதி உள்பட பல்வேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் இன்று சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் கூறினார் விஜய்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.
இதுவரை இல்லாத நடைமுறையாக பாதிக்கப்பட்டவர்களை தான் இருக்கும் இடதிற்கு அழைத்து வந்து அரசியல் தலைவர் ஒருவர் ஆறுதல் கூறுவது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "பாதிக்கப்பட்ட மக்களின் இடத்திற்கு சென்றுதான் தலைவர்கள் இதுவரை ஆறுதல் கூறியுள்ளனர். இவ்வளவு காலம், நாம் அதை தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால் நடிகர் விஜய், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை வரவழைத்து பார்ப்பது ஒரு புதிய அணுகுமுறையாக உள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கரூர் வந்தால் தனது உயிருக்கு ஆபத்து என நினைத்து பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்னைக்கு அழைத்து பார்த்திருக்கலாம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






