ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் 5 விசைப்படகுகளுடன் சிறைபிடிப்பு

இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்படையினர் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 7 மீனவர்களை சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அவர்களை சிறைபிடிப்பதோடு, பல லட்சம் மதிப்பிலான மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இலங்கை சிறையில் இருந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீனவர்கள் விடுதலையானபோதும், படகுகளை அரசுடமையாக்குவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆரோக்கிய கந்தன், இஸ்ரோல் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளுடன் அதில் இருந்த 21 மீனவர்களை 17-ந்தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக இன்று 32 மீனவர்களை 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்றை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்தநிலையில், அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்படையினர் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 7 மீனவர்களை சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இதே போன்று காங்கேசம் கடற்படையினர் 3 விசைப் படகுகளுடன் 25 மீனவர்களை சிறைபிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். படகில் இருந்த மீனவர்கள் விக்டோரியன் என்பவரது விசைப்படகுகளில் இருந்த அந்தோணி ஆரோன், ஜேசு ராஜா, திருப்பால் மற்றும் அருளானந்தம் என்பவரது படகில் இருந்த ஜெகன், அந்தோணி காட்ஷன், ராஜசேகர், ராஜா முகம்மது, ரஞ்சித், ராமு, காயன், மோகன், மனோகரன், சேகரன், முருகன் உள்ளிட்ட 32 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததுடன் மீனவர்கள் 32 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீதியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை கைது செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் வி.பி.ஜேசுராஜா கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு கவனம் செலுத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com