நடிகை கவுதமி புகார் - சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை சோதனை

சொத்துகளை பராமரிப்பதற்காக பவர் ஆப் அட்டர்னியாக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார்.
Actress Gautami
Published on

நடிகை கவுதமி காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் தனது சொத்துக்களை நிர்வகிக்க பொது அதிகாரம் கொடுத்திருந்தார்.

ஆனால் அவர் அதனை தவறாக பயன்படுத்தி ரூ.25 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக கவுதமி குற்றம்சாட்டி இருந்தார்.

மோசடி

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள 46 ஏக்கர் நிலத்தை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு அபகரித்து இருப்பதாகவும் 2016-17 -ம் ஆண்டில் வருமான வரி மதிப்பீட்டில், 8.61 ஏக்கர் நிலத்தை விற்று கிடைத்த 11.17 கோடி ரூபாயை, அழகப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் 4.10 கோடி ரூபாய்க்கு மட்டும் கொடுத்து விட்டு, மீதியை மோசடி செய்துள்ளனர். இதனால், 2.61 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர் எனவும் கவுதமி தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 65.31 லட்ச ரூபாய் செலுத்திய பிறகு நடிகை கவுதமி வங்கி கணக்குகளை மீட்டார். இதேபோன்று 2016-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில், அழகப்பன் மூலமாக 72.42 ஏக்கர் நிலம் தொடர்பாக மோசடி நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

கைது நடவடிக்கை

இது தொடர்பாக அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்குகளில் ஏமாற்றப்பட்ட சொத்தின் மூலம் கிடைத்த பணத்தினை அழகப்பன், அவரது மனைவி, வாரிசுகள், உறவினர்கள் உள்ளிட்ட பலர், வருமான வரி மற்றும் சட்டங்களை ஏமாற்றி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பான ஆவணங்களை நடிகை கவுதமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகை கவுதமியிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அதிரடி சோதனை

இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மோசடியில் ஈடுபட்ட அழகப்பன் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் அழகப்பன் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களிலும் சென்னை அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com