search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
    X

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் லேசான காய்ச்சல் தான் உள்ளது.
    • வலிமை மிக்க தலைவரான தாங்கள் முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் இந்த தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது.

    சென்னை புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் மழை நீர் வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்ட பிறகு மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த இரு நிகழ்ச்சிகளிலும் அவருடன் 7 அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

    இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், முத்துசாமி, மெய்யநாதன், மதி வேந்தன் ஆகியோரில் பலர் முககவசம் அணியாமல் தான் இருந்தனர்.

    இந்த நிலையில் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. வீட்டுக்கு மதியம் 1 மணியளவில் வந்ததும் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

    இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். உடனே டுவிட்டர் பதிவிலும் தகவல் வெளியிட்டார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் லேசான காய்ச்சல் தான் உள்ளது. இதனால் வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை எடுத்து கொள்கிறார். இதனால் அவர் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டில் அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் முகாம் அலுவலகத்துக்கு சென்று வழங்கினார்.

    அதில் கவர்னர் ஆர்.என்.ரவி எழுதியிருப்பதாவது:-

    கோவிட்-19 தொற்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த கவலையுற்றேன்.

    வலிமை மிக்க தலைவரான தாங்கள் முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் இந்த தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள்.

    தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×