search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்காசியில் வேகமெடுக்கும் தென்மேற்கு பருவமழை
    X

    தென்காசியில் வேகமெடுக்கும் தென்மேற்கு பருவமழை

    • தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும்.
    • மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும். இந்த மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சாரல்மழை அதிகமாக பொழியும்.

    வழக்கமாக வடகிழக்கு பருவமழை தான் இந்த மாவட்டங்களுக்கு அதிக அளவு மழையை கொடுக்கும் என்றாலும், கார் பருவ சாகுபடிக்கு தென்மேற்கு பருவமழையின் தேவையை விவசாயிகள் எதிர்பார்ப்பார்கள்.

    இந்த ஆண்டு சற்று தாமதமாகவே மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். குண்டாறு அணையும் நிரம்பி வழிவதால் அங்கு கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    அடவிநயினார் கோவில் அணை பகுதியில் நேற்று அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. குண்டாறில் 9 மில்லிமீட்டரும், கடனா அணை பகுதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கடையம் அருகே உள்ள 84 அடி கொண்ட ராமநதி அணையில் நேற்று 60 அடி நீர் இருந்த நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் மேலும் 3 அடி உயர்ந்தது.

    தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வேகம் எடுக்க தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் வெயில் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

    அணை பகுதியை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று அதன் நீர்மட்டம் 2 அடி வரை உயர்ந்து 54 அடியானது. சேர்வலாறில் 71 அடியும், மணிமுத்தாறில் 76.20 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×