search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
    X

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

    • அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • பெருநகர சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்கு படுத்துதல், சட்டம் 2014ன்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    களப்பணியாளர்கள் மூலம் இணையதள இணைப்புடன் கூடிய கைபேசி தரவு மூலம் தெருவோர வியாபாரி மற்றும் விற்பனை புகைப்படம், சுய விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவையான இதர தகவல்கள் ஆகியவற்றை பெற்று பதிவு செய்யும் பணி தற்பொழுது கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வருகிறது.

    இதனைத் தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.

    தெருவோர வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெறவும் வழிவகை செய்யப்படும்.

    மேலும், தெருவோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார நிதியிலிருந்து பல்வேறு மேம்பாட்டு வசதிகளை பெறவும், உணவு விற்பனை கடைகள் நடத்திட தமிழக உணவு பாதுகாப்பு துறையின் தரச் சான்றிதழ் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக, இஸ்ராம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் மத்திய அரசு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் மூலம் பதிவு கட்டணமின்றி தெருவோர வியாபாரிகளை பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்யும் வியாபாரிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மருத்துவ, விபத்து காப்பீடு வசதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே, மாநகராட்சியின் சார்பில் தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளர்களிடம் வியாபாரிகள் தங்களுடைய சுய விவரங்கள், விற்பனை பற்றிய தகவல்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை காண்பித்து இலவசமாக பதிவு செய்து கொண்டு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×