search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞரணியை பலப்படுத்த உதயநிதி ஸ்டாலின் புது வியூகம்
    X

    தி.மு.க. இளைஞரணியை பலப்படுத்த உதயநிதி ஸ்டாலின் 'புது வியூகம்'

    • சென்னை தெற்கு மாவட்டத்தில் மட்டும் 100 இடங்களில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த தேவையான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • இது போல் தமிழ்நாடு முழுவதும் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்த உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கி உள்ளார்.

    சென்னை:

    தி.மு.க.வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நபராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவியில் உள்ள உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் தினமும் தொகுதி மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிகிறார்.

    மக்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்பி கோரிக்கைகளை நிறைவேற்றியும் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியில் தினமும் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அவரது வேகத்தை பார்த்து கட்சி நிர்வாகிகள் வியந்து அவர் பின்னே ஓடுகிறார்கள்.

    ஒருபுறம் அரசியல், மற்றொரு புறம் சினிமா நடிகர் என்ற வகையில் உதயநிதி ஸ்டாலின் வலம் வந்தாலும் அவர் விரைவில் அமைச்சராகி விடுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சி அமைந்து 1 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டதால் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும் சரியாக செயல்படாத சில அமைச்சர்களை மாற்றி விட்டு புதிய அமைச்சர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நியமிப்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. அந்த மாற்றத்தின்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி விடுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.

    ஆனால் இப்போதைக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவர் அமைச்சராக வேண்டும் என்று ஒவ்வொரு அமைச்சர்களும் கருத்து தெரிவித்து வந்தாலும் அமைச்சராகும் ஆசையில் அவர் இல்லை என்றே தெரிகிறது.

    கட்சிப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே அவரது எண்ணமாக உள்ளது.

    இதனால்தான் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் இளைஞரணியினர் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பயிற்சி பாசறை கூட்டத்தை தொடங்கி வைத்து உதயநிதி ஸ்டாலின் இளைஞரணினருக்கு பல்வேறு ஆலோனைகளை வழங்கினார்.

    திராவிட மாடல் அரசுக்கு வித்திட்டவர் கருணாநிதி. தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தியவர். குறைந்தபட்ச ஆதாரவிலை இலவச பட்டா, இலவச கல்வி, உதவித்தொகை, இடஒதுக்கீடு பெற்றுதந்தது உள்ளிட்ட எண்ணற்ற சாதனைகளை செய்தவர் என்று பெருமிதத்துடன் கூறினார்.

    அதுமட்டுமின்றி பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே இதுதான் திராவிட மாடல் என்று தைரியமாக வகுப்பு எடுத்தவர் நம் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மாநிலத்தின் தேவை களை பட்டியலிட்டு வகுப்பு எடுத்தவர். இந்த துணிச்சல், தைரியம்தான் திராவிட மாடல் ஆட்சி என்றும், தமிழ்நாட்டை நம்பர்-1 மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் அனைவரும் உழைத்து கொண்டிருப்பதாகவும் அனைவரும் முழுஈடுபாட்டுடன் கட்சிபணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இங்கு பேசும் கருத்துக்களை மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் கருத்தாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும், 1000 பேர், 1500 பேர் என்று ஆட்களை கூட்டி நிகழ்ச்சியை நடத்த வேண்டியதில்லை. அதிகபட்சம் 250 பேர் இருந்தாலே போதும். திராவிட மாடல் ஆட்சி பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்தலாம் என்றும் இதற்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்த முதற்கட்டமாக 20 கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 20 எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர வேண்டும் என்றும், திராவிட மாடல் என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கி மாநிலம் முழுவதும் அதை பரப்ப வேண்டும் என்றும் கூறினார்.

    இதை செயல்படுத்தும் விதமாக சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போது சென்னை தெற்கு மாவட்டத்தில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தொகுதிகளில் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடைபெற உள்ளது. கட்சி உணர்வை ஊட்ட, இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள், கட்சி வளர்ந்த விதம், கட்சிக்காக உழைத்தவர்கள், மக்களுக்காக செய்த தியாகம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு பயிற்சியில் எடுத்துரைக்க உள்ளன.

    சென்னை தெற்கு மாவட்டத்தில் மட்டும் 100 இடங்களில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த தேவையான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது போல் தமிழ்நாடு முழுவதும் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்த உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கி உள்ளார். இந்த கூட்டங்களில் பங்கேற்க விரைவில் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    எனவே கட்சியை பலப்படுத்தும் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இறங்க உள்ளதால் இப்போதைக்கு அவர் அமைச்சராக வாய்ப்பில்லை.

    Next Story
    ×