search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி

    • பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது ? என்று நீதிபதிகள் கேள்வி.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே நிறைவேற்ற முடிவு செய்திருந்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. அந்த நேரத்தில் ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் கூடும் என்றும் அதில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானமும் சேர்க்கப்பட்டு ஏற்கனவே உள்ள 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நாளை (7-ந்தேதி) விசாரணைக்கு வர உள்ளது.

    கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர்.

    மேலும் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்புதராததால் கட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

    அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு தராததால் கட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை மாறி இன்று ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக மட்டும் செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறதோ அந்த பொறுப்புகளுக்கு ஏற்ப அவர் செயல்படவில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் தனது பொறுப்புகளை சரிவர செய்யவில்லை. பொருளாளர் கையெழுத்திடாததால் பணியாளர்களுக்கு ஊதியம் தரமுடியவில்லை' என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடினால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சுப்ரீம் கோர்டு நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 23 தீர்மானங்களுக்கு மேல் நிறைவேற்றக் கூடாது என்கிற அந்த சமயத்தில் ஏற்கனவே நடை பெற்ற பொதுக்குழுவில் முடிந்துவிட்டது.

    ஏனென்றால் அந்த பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. எனவே அதற்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த வக்கீல், 'எங்களுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு போடப்படுகிறது. எனவே கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடரக்கூடாது என்று ஆணையிட வேண்டும். ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுகூட்டத்துக்கு எந்த விதமான தடங்கலும் இருக்க கூடாது. தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்ற சுதந்திரம் வேண்டும்.

    கடந்த முறை நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தது போல எந்தவிதமான தடையோ, கட்டுப்பாடுகளோ வந்துவிடக்கூடாது என்ற வாதங்களை முன் வைத்தார். அதற்கு நீதிபதி, 'ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு நாங்கள் ஏன் தடை விதிக்க வேண்டும்? கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு என்ன காரணங்கள் உள்ளன.

    இந்த வழக்கு ஐகோர்ட் டில் இருக்கிறது. அவர்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் பொதுக்குழுவுக்கு கட்டுப்பாடு மற்றும் தடையை ஏன் விதிக்க வேண்டும்?

    இது உள்கட்சி பிரச்சினை என்பதால் இதை நீங்கள் தான் சரிசெய்துகொள்ள வேண்டும். இதை ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு வருகிறீர்கள்? தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் நீதிமன்ற அவமதிப்பு என்ன இருக்கிறது?

    இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் ஒரு நபர் அமர்வு முடிவு எடுக்க வேண்டும். ஜூலை 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? கட்சி உள் விவ காரங்கள், பொதுக்குழு செயல்பாடுகளில் கோர்ட்டு தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    நீங்கள் ஒரு கட்டத்தில் நட்பாக இருந்தீர்கள். இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது' என்று நீதிபதி கூறினார்.

    இதையடுத்து இந்த மேல் முறையீட்டு வழக்கில் இரு தரப்பினரும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல்கள் வைத்தியநாதன், சித்தார்த்ருத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடி னார்கள். வழக்கு விசாரணை நடைபெற்றதை யொட்டி சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர்.

    Next Story
    ×