search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி:  8 அகதிகள் படகு மூலம் தனுஷ்கோடி வருகை
    X

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி: 8 அகதிகள் படகு மூலம் தனுஷ்கோடி வருகை

    • இலங்கையில் அரசியல் குழப்பம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
    • தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் வந்திருப்பது தெரியவந்தது.

    ராமேசுவரம்:

    இலங்கையில் அரசியல் குழப்பம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் சமீபத்தில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

    இதைத்தொடர்ந்து நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் அங்கு வாழ முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் தாய் நாட்டுக்கு வர விரும்புகின்றனர்.

    கடந்த 5 மாதங்களில் கடல் வழியாக படகுகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி வந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் வந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி மீனவர்கள் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இலங்கையில் இருந்து வந்த 8 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் யாழ்பாணம் வாழ்வெட்டிதுறை பகுதியை சேர்ந்த லவேந்திரன் (வயது 24), அவரது மனைவி சசிகலா (23), அவர்களது குழந்தை சதீஷ், இன்னொரு குடும்பத்தை சேர்ந்த செல்வராஜ் விஜய காந்த் (33), மற்றொரு குடும்பத்தை சேர்ந்த கமலாராணி (42), அவரது மகன்கள் சங்கரன் (19), ஸ்ரீராம் (14), மகள் நிலானி (9) என்பது தெரியவந்தது. அவர்கள் இலங்கை மீனவர்களிடம் பேசி அவர்களது பைபர் படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இதற்காக படகு உரிமையாளர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளனர்.

    இதுபற்றி அவர்கள் கூறும்போது, இலங்கையில் தற்போது சரியாக வேலை கிடைப்பதில்லை. அப்படியே சில நேரம் வேலை கிடைத்தாலும் அதன் மூலம் கிடைக்கும் கூலி பணத்தை கொண்டு அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை. எனவே அங்கேயே இருந்தால் நாங்கள் உணவு கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும் என்ற நிலையில் தமிழகத்திற்கு வந்துள்ளோம். எங்களது மறுவாழ்வுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கடந்த 5 மாதங்களில் இலங்கையில் இருந்து 104 பேர் படகுகள் மூலம் தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×