search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நிறைவேறாத திட்டங்களை பட்டியலிட்ட சீமான்
    X

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நிறைவேறாத திட்டங்களை பட்டியலிட்ட சீமான்

    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது என உறுதியளித்தீர்கள். இப்போது 150 விழுக்காடுவரை சொத்து வரியை உயர்த்திவிட்டீர்கள்!
    • தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது?

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள் முதல்வரே? அவற்றை எல்லாம் மக்கள் அறிவார்களா?

    நீட் தேர்வுக்கான விலக்கைப் பெறுவோம் என மேடைதோறும் முழங்கினீர்கள். உங்கள் ஆட்சியில் இதோ இரண்டாவது நீட் தேர்வும் வந்துவிட்டது. என்ன ஆயிற்று அந்த சூத்திரம்,

    ஏழு தமிழர் விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம் என்றீர்கள்! தம்பி பேரறிவாளன் தானாகச் சட்டப்போராட்டம் நடத்திப் பெற்ற விடுதலைத் தீர்ப்பு, ஆறுபேர் விடுதலைக்கான திறவுகோலாகக் கிடைத்தும், அதனைக்கொண்டு, ஆளுநருக்கு அழுத்தம் தந்து விடுதலையைச் சாத்தியப்படுத்தாமல் நிற்பதேன்?

    சமூக நீதியின் அடிப்படையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 இப்போது அதற்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், நிதிநிலை சரியான பிறகு கொடுப்போம் என்றும் சாக்கு போக்குச் சொல்கிறீர்கள்.

    அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையானக் குடிநீர் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். எப்போது அவற்றை செயல்படுத்தப் போகிறீர்கள்?

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது என உறுதியளித்தீர்கள். இப்போது 150 விழுக்காடுவரை சொத்து வரியை உயர்த்திவிட்டீர்கள்!

    தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது?

    30 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தீர்கள். பிறகு அதுகுறித்தான எந்த அறிவிப்பும் வரவில்லையே? கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள்! ஆனால் நம்பிக் கடன் வாங்கிய மக்கள் வட்டி செலுத்த முடியாமல் திண்டாடி வருவது பெருஞ்சோகம்.

    மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தீர்கள். அதையும் முழுமையாகச் செய்தபாடில்லை.

    ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

    நடைபாதை வாசிகளுக்கு இரவுநேரக் காப்பகங்கள் அமைக்கப்படும் என்ற உங்களின் அறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது?

    60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது?

    ஏழை மக்களின் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் உணவகம் அமைக்கப்படும் என உறுதியளித்தீர்கள். எத்தனை இடங்களில் இதுவரை உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன?

    மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழ்நாட்டுப் பள்ளிகள் அனைத்திலும் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கிடச் சட்டம் கொண்டு வரப்படும் என அக்கறையுடன் அறிவித்தீர்கள்! அண்மையில் வந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் 47,000 பேர் தமிழ்மொழிப் பாடத்தில் தோல்வியுற்றதாகத்தான் செய்தி வந்தது. இனியாவது தமிழ் கட்டாயப்பாடம் ஆக வேண்டியதன் தேவை உணர்ந்து அச்சட்டத்தை இயற்றுவீர்களா?

    வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்து போன்றவைக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என உறுதியளித்தீர்கள். நிர்ணயம் செய்துவிட்டீர்களா?

    அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதியின் நிலை என்ன?

    இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக்குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள்! ஆனால், அகதிகளாகப் பதிவுசெய்த ஈழச்சொந்தங்களுக்கு, உரிய உரிமைகளைக்கூடப் பெற்றுத்தராது, அவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகள் எனக்கூறி, சிறப்பு முகாம் எனப்படும் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்து வேடிக்கைப் பார்க்கிறீர்கள்.

    இப்படி உங்களால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன!

    உண்மை இவ்வாறிருக்க, தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்றிவிட்டதாகக்கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×