search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி சுங்கச்சாவடியில் சசிகலா ஆதரவாளர்களுடன் திடீர் மறியல்
    X

    திருச்சி சுங்கச்சாவடியில் சசிகலா ஆதரவாளர்களுடன் திடீர் மறியல்

    • சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கச் சாவடி ஸ்கேன் தடுப்பு கட்டை தட்டி இடித்துள்ளது.
    • சசிகலா தனது ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நேற்று இரவு 11.45 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார்.

    அப்போது துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் கார் நிறுத்தப்பட்டது. சசிகலாவின் காருக்கு முன்னாலும், பின்னாலும் மேலும் நான்கு கார்கள் அணிவகுத்து சென்றன. முன்னால் சென்ற கார் ஸ்கேன் செய்யப்பட்டு சென்றதும் பின்னால் சசிகலாவின் கார் சென்றது.

    அப்போது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கச் சாவடி ஸ்கேன் தடுப்பு கட்டை தட்டி இடித்துள்ளது. இதையஎடுத்து சசிகலா தனது காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்தியுள்ளார். உடனே அவரது ஆதரவாளர்களும் சுங்கச்சாவடியில் உள்ள கட்டண நுழைவாயில்களில் ஆங்காங்கே கார்களை அடுத்தடுத்து நிறுத்தியுள்ளதோடு மறியலிலும் ஈடுபட்டனர்.

    இதனால் தங்களை தாக்கி விடுவார்கள் என்று பயந்து போன சுங்கச்சாவடி பணியாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதற்கிடையே காரில் அமர்ந்தவாறே சசிகலா சுங்கச்சாவடி மேலாளர் உடனடியாக இங்கு வரவேண்டும் என கூறியுள்ளார்.

    மேலும் இது போல் தனக்கு 3 முறை இந்த துவாக்குடி டோல்பூத்தில் நடந்துள்ளதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோல் நடத்துகிறார்கள் எனவும் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மேலாளர் வரவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்மந்தப்பட்ட சசிகலா தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் பலனளிக்காததை தொடர்ந்து சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அவர் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார். மேலும் இப்பிரச்சினை குறித்து நீங்கள் வேண்டுமானால் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் சசிகலா தரப்பினரிடம் கூறியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட சசிகலா காரை விட்டு இறங்காமல் காரில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    சசிகலா தனது ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×