search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
    X

    தமிழகம் முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

    • வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அதாவது வருகிற சனிக்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்வது அதிகரித்து உள்ளது.

    ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் வழக்கமாக 56 மி.மீட்டர் மழை பெய்யும். ஆனால் கடந்த 19-ந்தேதி ஒரே நாளில் 82.1 மி.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை ஆகும்.

    வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு மழை பெய்தது. நேற்று மாலை 6 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. செங்குன்றம். திருவாலங்காடு, தாம்பரம் பகுதிகளில் அதிக மழை பெய்தது. விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.

    இன்று காலையிலும் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

    வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அதாவது வருகிற சனிக்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    கன மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள சாலையோர மழை நீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    மழை தொடர்பான புகார்களை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.

    தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 336 மி.மீ மழை இயல்பாக பெய்யும். இது மாநிலத்தின் மொத்த மழை அளவில் 35.84 சதவீதம் ஆகும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வருகிறது. கடந்த 20-ந் தேதி வரை 65.7 மி.மீ மழை பெய்துள்ளது. இது இந்த காலக்கட்டத்தில் பொதுவாக பெய்யும் இயல்பான மழை அளவை காட்டிலும் 85 சதவீதம் கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×