search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல் காந்தி 4 நாட்கள் தமிழ்நாட்டில் பாத யாத்திரை
    X

    ராகுல் காந்தி 4 நாட்கள் தமிழ்நாட்டில் பாத யாத்திரை

    • ராகுல் காந்தி 7-ந் தேதி மாலையில் கன்னியாகுமரி வருகிறார். அங்கு காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கிறார்.
    • ராகுல் காந்தியின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.

    இந்த பாத யாத்திரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது. அங்கிருந்து களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு பாத யாத்திரையாக செல்கிறார்.

    இந்த பாத யாத்திரையை வெற்றிகரமாக நடத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள 76 காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தொண்டர்களை அழைத்து செல்வது மற்றும் தேவையான எற்பாடுகள் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    ராகுல் காந்தி 7-ந் தேதி மாலையில் கன்னியாகுமரி வருகிறார். அங்கு காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அத்துடன் அன்றைய பயணம் நிறைவடைகிறது.

    மீண்டும் மறுநாள் (8-ந்தேதி) காலை பாத யாத்திரையை தொடர்கிறார். கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை சுமார் 60 கி.மீ. தூரம். இந்த தூரத்தை சுமார் 3 நாட்களாக ராகுல் நடக்கிறார். ஒவ்வொரு நாளும் வழிநெடுக வரவேற்பு கொடுப்பது, மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை ஆலோசித்து வருகிறார்கள்.

    ராகுல்காந்தியின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறுகிறது. 4 நாட்கள் தமிழகத்தில் அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பாத யாத்திரை நடைபெறுவதால் தமிழகத்தில் மேலும் ஒரு பகுதிக்கு அவர் வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

    அதன்படி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை கூடலூர் பகுதிகளுக்கு பாத யாத்திரை செல்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் எம்.பி. மற்றும் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஜோதி மணி, மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்க பாலு, டாக்டர் செல்லக்குமார் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் செல்வப் பெருந்தகை, ரூபி மனோகரன், ராஜேஷ் குமார், விஜயதரணி, பிரின்ஸ், மாவட்ட தலைவர்கள் சிவராஜ சேகரன், நாஞ்சில் பிரசாத், அடையாறு துரை, டெல்லி பாபு மற்றும் மாநில நிர்வாகிகள் கோபண்ணா, சிரஞ்சீவி, தாமோதரன், அகரம் கோபி, இதயத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×