search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
    X

    வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

    • பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    • மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில்அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.ஆர்.பெரிய கருப்பன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வருவாய் ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் அரசு துறை செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    'வருமுன் காப்பதே அரசு, வந்த பின் திட்டமிடுவது இழுக்கு' என்ற அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை நாம் நடத்தி இருக்கிறோம். இத்தகைய முன் எச்சரிக்கை கூட்டங்கள் தான் அவசிய, அவசரமானவை. அதனை அனைத்து அரசுத் துறைகளும் உணர்ந்திருப்பதை அறிந்து உள்ளபடியே பாராட்டுகிறேன்.

    அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இங்கு பேசிய அதிகாரிகள் அனைவரும் விரிவாக எடுத்து சொன்னீர்கள். அனைத்துத் துறையும் தயார் நிலையில் இருப்பதை அறிந்து மன நிறைவடைகிறேன். கடந்த ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தபோது பெருமழையைச் சந்தித்தோம்.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் பெரும் சவாலாகவே இருந்தது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று நாம் அப்போது முடிவெடுத்தோம். அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

    இதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க மரியாதைக்குரிய திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த ஆலோசனை படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

    சென்னை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னையிலே கடந்த ஆண்டு அதிக அளவிலே வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை கண்காணித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகமிக அவசியமானது.

    இதுமட்டுமின்றி சென்னையின் முதன்மையான நீராதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் ஏற்கனவே போதிய அளவில் நீர் இருப்பு உள்ளதாக நான் அறிகிறேன். ஆகவே பருவமழையையொட்டி இந்த ஏரிகளின் நீர்வரத்து, நீர் இருப்பு அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து, அதை முறையாக கையாள வேண்டும்.

    மழைக் காலத்தின்போது நகர்ப்புறங்களில் மின்கம்பிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தடுப்புகளின்றி இருப்பது விபத்துகளை ஏற்படுத்தக் கூடும். அதுமட்டுமின்றி, கடும் போக்குவரத்து நெரிசலையும் அவை ஏற்படுத்தி விடுகிறது.

    எனவே, மழைவெள்ளத் தடுப்பு தொடர்பாக தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க நீங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டுமென்று உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    நான் ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும் மழைக்காலத்திற்கு முன்பாக ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று அதை பார்வையிட வேண்டும். அந்த மாவட்டத்திலேயே தங்கி, பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்யுங்கள்.

    இதில் குறிப்பாக பள்ளிக் கட்டிடங்களின் மீது நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடர்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். முக்கியக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம்.

    இதன் மூலமாக இம்முறை சென்னை நகரில் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று நான் ஓரளவுக்கு நம்பிக் கொண்டிருக்கிறேன், எதிர்பார்க்கின்றேன். அதே வேளையில், தேங்காது என்கிற நினைப்போடு நீங்களும் மெத்தனமாவும் இருந்து விடக்கூடாது.

    மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித்தனியாக இயங்காமல், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    அரசுத் துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து முன்எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    கடந்த முறை வானிலை எச்சரிக்கைத் தகவல்களைக் குறித்த காலத்தில் பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டது. அதனைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து சரியான தகவல்களை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் தரவுகளையும், வருவாய்த் துறையில் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளைச் நீங்கள் செய்ய வேண்டும்.

    நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதில் குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

    ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் நாம் கவனமெடுத்து செயல்பட்டால், கடும் மழையினால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்கள், உழவர்கள், மீனவர்கள் போன்றவர்களுக்கு ஏற்படக்கூடிய துயரை நாம் ஓரளவுக்கு குறைக்க முடியும். அதுதான் இந்த அரசினுடைய நோக்கம்.

    உங்களுக்கு ஏற்படக் கூடிய எண்ணங்களை, உடனுக்குடன் அரசுக்கு நீங்கள் தெரிவித்து அந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களில் மட்டும்தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்பது இல்லை. உடனுக்குடன் நீங்கள் சொல்ல வேண்டும்.

    பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு.

    ஆகவே, நீங்கள் அனைவரும் இதில் முழு கவனத்துடன், ஈடுபட வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×