search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செப்டம்பரில் வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
    X

    செப்டம்பரில் வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

    • கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது.
    • இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 6.71 லட்சம் மிதிவண்டிகள் ரூ.341 கோடி மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளிடம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னையில் உள்ள 174 பள்ளிகளில் 27,689 மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்படும் மிதிவண்டிகளின் தரம் மாணவ, மாணவிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று பாதிப்பு உள்ளது. எனினும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தித்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. எனவே மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×