search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காசிமேடு மீன் மார்க்கெட்- இறைச்சி கடைகள் வெறிச்சோடின: மீன் விலை கடும் சரிவு
    X

    காசிமேடு மீன் மார்க்கெட்- இறைச்சி கடைகள் வெறிச்சோடின: மீன் விலை கடும் சரிவு

    • காசிமேடு துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
    • காசிமேடு துறைமுகத்தில் மீன் விலை குறைவு என்றாலும் வாங்க ஆட்கள் இல்லை.

    ராயபுரம்:

    காசிமேட்டில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டு வார்கள். இதனால் கூட்டம் களைகட்டும். நள்ளிரவு 2மணி முதலே மீன் ஏலம் நடைபெறும் என்பதால் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் மீன்களை வாங்க அதிகாலை முதல் வருவார்கள்.

    கடந்த வாரம் புரட்டாசி மாதம் தொடங்கியது. பெருமாளுக்கு உகந்த இந்த மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை, மகாளய அமாவாசை என்பதால் இன்று காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன்வாங்க வருபவர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. மக்கள் வெள்ளத்தில் காணப்படும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கூட்டம் இல்லாமல் கலைஇழந்து காணப்பட்டது.

    மேலும் பெருமளவு விசைப்படகுகள் கரை திரும்பாததால் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. இதே போல் மீன்களின் விலையும் வழக்கத்தை விட சரிந்தது.

    அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி உண்ணக்கூடிய வஞ்சிரம் மீன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ரூ.1200 விற்கப்பட்டது. இது தற்போது கிலோ ரூ.700க்கு விற்பனை ஆனது. வவ்வால் மீன் ரூ.400, பாறை மீன் ரூ. 300க்கும் விலை குறைந்து விற்பனை ஆனது. அதனையும் வாங்க ஆட்கள் இல்லை. இதனால் காசிமேடு துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் விஜேஷ் கூறும்போது, இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் பெரும்பாலானவர்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்து உள்ளனர். இதனால் காசிமேடு துறைமுகத்தில் மீன் விலை குறைவு என்றாலும் வாங்க ஆட்கள் இல்லை.

    கடுமையான டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபட முடியாத சூழ்நிலை உள்ளது. இருந்த போதிலும் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஆழ்கடலில் மீன் பிடித்து கரை திரும்பிய போது இதுபோன்று மீன்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் எங்களைப் போன்ற விசைப்படகு உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

    அரசு மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மானிய விலை டீசல் விலையை குறைத்தும் அதிகப்படியான டீசலையும் வழங்கி பல லட்சம் மீனவகுடும்பங்களை காப்பாற்றிட வேண்டும் என்றார்.

    காசிமேட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-

    கடம்பா (பெரிய வகை)-ரூ.380, கடம்பா (சிறிய வகை)- ரூ.200.

    பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் குறைவாக இருந்தன.மீன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் குறைவாக இருந்தன. பெரும்பாலான கோழி, ஆடு இறைச்சி கடைகள் மூடி இருந்தன. திறந்து இருந்த இறைச்சி கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×