search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 6 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன- 2600 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன

    • பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், திருவேற்காடு, மதுரவாயல், வானகரம், மணலி, செங்குன்றம், மாதவரம், மூலக்கடை பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • சென்னை பெருநகரம், ஆவடி, தாம்பரம் மாநகரங்கள் சார்பில் 21 ஆயிரத்து 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் கடந்த 31-ந்தேதி ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.

    இதில் இந்து முன்னணி சார்பில் 2421 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. மற்ற அமைப்புகள் வைத்த சிலைகளையும் சேர்த்து 2600-க்கும் அதிகமான சிலைகள் வைத்திருந்தனர்.

    இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

    மேலும் எந்தெந்த பகுதிகளில் இருப்பவர்கள் எந்த பகுதிகள் வழியாக செல்ல வேண்டும் என்று ஊர்வல பாதைகளையும் போலீசார் முன்கூட்டியே தெரிவித்தனர்.

    நிறைவு நாளான நேற்று இரவு சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனால் விநாயகர் சிலைகள் வைத்திருந்த பகுதிகள் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    பல இடங்களில் விநாயகர் சிலைகளை அந்த பகுதியில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக எடுத்து சென்றார்கள். பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்றார்கள். வீடுகளில் வைத்து வழிபட்ட சிறு சிலைகளையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    இன்று காலை முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்காக எடுத்து வரப்பட்டன.

    இந்து முன்னணி சார்பில் வள்ளுவர் கோட்டம், திருவட்டீஸ்வரன் பேட்டை, முத்துசாமி பாலம் ஆகிய இடங்களில் இருந்து பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது.

    தீவுத்திடல் முத்துசாமி பாலம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாநில துணை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் மணலி மனோகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதேபோல் திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை பொது செயலாளர் முருகானந்தம், மாநகர தலைவர் இளங்கோவன் ஆகியோரும் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, மேகநாதன் ஆகியோரும் தொடங்கி வைத்தனர்.

    வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கதீட்ரல் ரோடு, ராதாகிருஷ்ணன் சாலை, காந்தி சிலை வழியாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சென்றடைந்தது.

    முத்துசாமி பாலத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கொடிமர சாலை, நேப்பியர் பாலம், காமராஜர் சாலை வழியாக பட்டினப்பாக்கம் சென்றடைந்தது.

    வேளச்சேரி விஜயநகரம் பகுதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நூறடிசாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ், ராஜீவ் காந்தி சாலை, தரமணி, திருவான்மியூர், ஈ.சி.ஆர். வழியாக நீலாங்கரையை சென்றடைந்தது.

    சிலை கரைத்த இடங்களில் போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ராட்சத கிரேன்கள் மூலம் சிலைகள் கடலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

    ஊர்வலத்தில் வந்தவர்களை கூட்டமாக கடலுக்குள் இறங்க அனுமதிக்கவில்லை. நீச்சல் வீரர்கள், பாதுகாப்பு படகுகள், கடலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    நகர் முழுவதும் ஊர்வலமாக சிலைகள் எடுத்து வரப்பட்டதால் ஈவிஆர் சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் ரோடு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் ரோடு, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதீட்ரல் ரோடு, ஆ.கே.சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் ஹைரோடு, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திருவொற்றியூர் ரோடு, எம்.எஸ். கோயில் ரோடு, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பேசின் பாலம், வால்டாக்ஸ் ரோடு, பழைய ஜெயில் ரோடு, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம், கொடி மரச்சாலை, காமராஜர் சாலை, வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பு, இ.சி.ஆர், ஓ.எம்.ஆர், எல்.பி. ரோடு, தரமணி ரோடு, அண்ணாசாலை, பட்ரோடு, சர்தார் வல்லபாய் படேல் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோல் பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், திருவேற்காடு, மதுரவாயல், வானகரம், மணலி, செங்குன்றம், மாதவரம், மூலக்கடை பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை பெருநகரம், ஆவடி, தாம்பரம் மாநகரங்கள் சார்பில் 21 ஆயிரத்து 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.

    Next Story
    ×