என் மலர்

  தமிழ்நாடு

  சென்னையில் இருந்து ஒரே நாளில் 2 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்- விடிய, விடிய சிறப்பு பஸ்கள் இயக்கம்
  X

  சென்னையில் இருந்து ஒரே நாளில் 2 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்- விடிய, விடிய சிறப்பு பஸ்கள் இயக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை 4 மணியில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
  • பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், செஞ்சி செல்லக்கூடிய பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது.

  சென்னை:

  தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டன.

  தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாளை வரை சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக சென்னையில் 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

  வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை விட (6,300) கூடுதலாக 4,128 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. முதல் நாளான நேற்றே கூட்டம் அலைமோதியது. வழக்கமாக மாலையில் இருந்துதான் கூட்டம் அதிகரிக்கும்.

  ஆனால் நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் கோயம்பேடு உள்ளிட்ட சிறப்பு பஸ் நிலையங்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக புறப்பட்டு வந்தனர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது.

  பொதுமக்கள் எளிதாக பஸ்களில் ஏறி பயணம் செய்ய வசதியாக போக்குவரத்து கழகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடைமேடைகளில் உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


  தாங்கள் செல்லும் பகுதிக்கான பஸ்சில் இடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்த்து சொல்ல கம்ப்யூட்டர் தகவல் மையம் நடைமேடையில் நிறுவப்பட்டு உள்ளது. இருக்கைகள் இருக்கும்பட்சத்தில் முன்பதிவு செய்யவும், நேரடியாக பஸ்சில் அமரவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, கோவை, கும்பகோணம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கோயம்பேட்டில் முகாமிட்டு பயணிகள் எளிதாக பஸ்களுக்கு செல்ல வழி வகுத்தனர்.

  நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இரவு 7, 8 மணிக்கு கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. கூட்டத்தை சமாளிக்க தயாராக நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு பஸ்கள் மூலம் ஏற்றி அனுப்பி வைத்தனர். நள்ளிரவு வரை மக்கள் வந்து கொண்டே இருந்ததால் அதற்கேற்றவாறு பஸ்களை இயக்கினார்கள்.

  திருச்சி, மதுரைக்கு அதிகளவில் மக்கள் பயணம் செய்தனர். அதிகாலை 2 மணி வரை கூட்டம் இருந்ததால் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். "பஸ் இல்லை" என்று சொல்லாத அளவிற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டன.

  நேற்று ஒரே நாளில் மட்டும் அரசு பஸ்களில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்றனர். சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் விழுப்புரம் பகுதி மக்கள் செல்ல விடப்பட்டன.

  இது தவிர 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் 30 ஆயிரம் பேர் வெளியூர் சென்றனர்.

  இதற்கிடையில் கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை 4 மணியில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், செஞ்சி செல்லக்கூடிய பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது.

  இன்று மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 3,686 பஸ்கள் இயக்கப்படுகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் இன்று வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் சனிக்கிழமை வேலையை முடித்து விட்டு கூலியை பெற்று செல்வார்கள் என்பதால் தேவையான பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

  முன்னதாக தீபாவளி சிறப்பு பஸ் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு ஆய்வு செய்தார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு வெளியூர் செல்ல வசதியாக செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

  பஸ் இல்லாததால் பயணம் தடைபட்டது என்ற நிலை வராத வகையில் பொதுமக்களுக்கு தேவையான அளவு பஸ் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

  இந்த ஆய்வின் போது அமைச்சருடன் போக்குவரத்து செயலாளர் கோபால், கமிஷனர் நிர்மல் ராஜ், மேலாண்மை இயக்குனர்கள் அன்பு ஆபிரகாம், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×