search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் கூலி உயர்வு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை- 1000-க்கும் மேற்பட்டோர் கைது
    X

    கோவையில் கூலி உயர்வு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை- 1000-க்கும் மேற்பட்டோர் கைது

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்க கலெக்டர் நிர்ணயித்துள்ளார். ஆனால் அந்த கூலி உயர்வினை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
    • காலை நேரத்தில் ஏராளமான தூய்மை பணியார்கள் கலெக்டர் அலுவலக சாலையில் குவிந்து போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.323 வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே தங்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்க கலெக்டர் நிர்ணயித்துள்ளார். ஆனால் அந்த கூலி உயர்வினை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

    இதனை தொடர்ந்து, கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    இதையடுத்து கோரிக்கை மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் உள்பட பலருக்கும் முன் அறிவிப்பு கொடுத்தனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் 2 முறை பேச்சுவார்த்தை நடை பெற்றது.

    அது தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக நேற்று முதல் கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் நாளை (இன்று) கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபடஉள்ளதாகவும் அறிவித்தனர்.

    அதன்படி இன்று காலை முதலே கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தூய்மை பணியாளர்கள் வேன்களில் வந்து குவிந்தனர்.

    காலையிலேயே 1000த்திற்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர்கள் கலைந்து போகவில்லை. நேரம், செல்ல, செல்ல இன்னும் தூய்மை பணியாளர்கள் அங்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதையடுத்து, காட்டூர் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து போகமாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து போராடினர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் மாதவன், உதவி கமிஷனர் வின்சென்ட் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    காலை நேரத்தில் ஏராளமான தூய்மை பணியார்கள் கலெக்டர் அலுவலக சாலையில் குவிந்து போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோல் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×