search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகை: ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு
    X

    இந்திய கடற்படை கப்பல் ஹோவர் கிராப்ட் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகை: ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு

    • இந்தியாவின் எல்லை பகுதியையொட்டி இலங்கை அமைந்துள்ளது.
    • தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    இந்தியாவின் எல்லை பகுதியையொட்டி இலங்கை அமைந்துள்ளது. இந்த நிலையில் சீன உளவு கப்பல் என்று கூறப்படும் 'யுவான் வாங்-5' என்ற கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்று வந்தது.

    இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த கப்பல் இலங்கை அரசின் அனுமதியுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் வருகிற 22-ந் தேதி வரை அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலக்கட்டத்தில் கப்பலில் எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும் என்று சீனாதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பல் நிபந்தனைக்கு உட்பட்டு தொலை தொடர்பு சாதனங்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சீன கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரம் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தென் இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.

    முக்கியமாக தமிழக கடலோர பகுதிகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு படை போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

    தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ளதால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல் உள்பட 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    அதுமட்டுமின்றி இலங்கை கடல் பகுதியில் இருந்து ஏதேனும் சந்தேகப்படும்படியான படகுகள் வருகிறதா? அகதியாக யாரும் ஊடுருவி விடக்கூடாது? என்பதற்காக, கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து அதிநவீன ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ரேடார் கருவி உளவு கப்பலில் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்கும்.

    சீனகப்பல் 750 கி.மீ. சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதில் 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.அம்பாந்தோட்டை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமாக 6 படைதளங்கள் உள்ளன.

    அங்குள்ள தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட தகவல்களை சீனகப்பல் சேகரிக்கும் அபாயம் உள்ளதால் சீன உளவு கப்பல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சீனகப்பல் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னரே மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க செல்லும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×