search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகை வசூலிப்பதா?- அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகை வசூலிப்பதா?- அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

    • மக்கள் மீதான பொருளாதார தாக்குதல் ஆகும்.
    • ஒரு டிஜிட்டல் மீட்டரின் விலை ரூ.749 முதல் ரூ.2000 வரை மட்டும் தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது. இது மக்கள் மீதான பொருளாதார தாக்குதல் ஆகும்.

    மின்சாரக் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை கடந்த 18-ந்தேதி வெளியிட்ட மின்துறை அமைச்சர், ஒருபுறம் மின் கட்டணம் குறைந்த அளவில் உயர்த்தப்படும் நிலையில், மறுபுறம் நுகர்வோரிடம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 50 வரையிலான நிலைக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ரூ.50 கட்டணத்தை ரத்து செய்ததை கொண்டாட்டமாக அறிவித்து விட்டு, யாருக்கும் தெரியாமல் ரூ.350 கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல.

    இன்றைய நிலையில் ஒரு டிஜிட்டல் மீட்டரின் விலை ரூ.749 முதல் ரூ.2000 வரை மட்டும் தான். அதற்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வாடகை என்பது அநீதி. அதேபோல், ஒரு ஸ்மார்ட் மீட்டரின் இன்றைய விலை ரூ.6000 முதல் ரூ.7500 வரை. இந்தியாவுக்கு குறைந்தது 30 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் தேவைப்படும் நிலையில், அவற்றை அதிக அளவில் தயாரிக்கும் போது, ஒரு மீட்டரின் விற்பனை விலை ரூ.2000 முதல் ரூ.3000 என்ற அளவுக்கு குறையும். அவ்வாறு இருக்கும் போது அதற்காக இரு மாதங்களுக்கு ரூ.350 வாடகை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

    மின்வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ரூ.350-க்கும் குறைவான மின்கட்டணம் (250 யூனிட்டுகள்) செலுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 1.80 கோடி ஆகும். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் செலுத்தும் ஒட்டுமொத்த மின்கட்டணத்தை விட அதிக தொகையை மின்சார மீட்டருக்கான வாடகையாக மட்டும் வசூலிக்க நினைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்?

    அத்தியாவசியத் தேவைகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில், மின்சார மீட்டருக்கு வாடகை செலுத்த அவர்களால் முடியாது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிப்பது, மின்சாரக் கட்டணத்தை 52 சதவீதம் அளவுக்கு உயர்த்துவது போன்ற மக்களை பாதிக்கும் முடிவுகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×