search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. அலுவலக வன்முறை வழக்கு: ஐகோர்ட்டில் நாளை அறிக்கையை தாக்கல் செய்கிறது சி.பி.சி.ஐ.டி
    X

    அ.தி.மு.க. அலுவலக வன்முறை வழக்கு: ஐகோர்ட்டில் நாளை அறிக்கையை தாக்கல் செய்கிறது சி.பி.சி.ஐ.டி

    • அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர்.
    • அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற வன்முறை மற்றும் மோதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார், மோதல் தொடர்பாக அ.தி.மு.க. அலுவலகத்துக்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அ.தி.மு.க. அலுவலகம் உடைக்கப்பட்டது தொடர்பான தடயங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து பல்வேறு ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.

    இதனை தொடர்ந்து தலைமை கழக மேலாளர் மகாலிங்கத்தை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் போலீசார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர். அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மோதல் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் உரிய விசாரணையை போலீசார் மேற்கொள்ளவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×