search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கொரோனா பரவல் சில தினங்களில் குறைய தொடங்கும்- மருத்துவ நிபுணர்கள் தகவல்
    X

    தமிழகத்தில் கொரோனா பரவல் சில தினங்களில் குறைய தொடங்கும்- மருத்துவ நிபுணர்கள் தகவல்

    • நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.
    • கொரோனாவின் மறுதாக்கம் எண்ணிக்கை குறைந்து வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கடந்த ஒரு வாரமாக உயர்ந்தபடி உள்ளது.

    ஒமைக்ரான் பிஏ4 மற்றும் பிஏ5 வகை வைரசுகள் அதிகளவு பரவுவதால்தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே ஒமைக்ரான் பிஏ2.75 ரக வைரசும் மிக வேகமாக பரவுவதாக இஸ்ரேல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இன்று காலை நிலவரப் படி இந்தியாவில் 16 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டிருப்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. பரிசோ தனைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,672 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. திங்கட்கிழமை 2,654 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று அந்த எண்ணிக்கை 2,662 ஆக உயர்ந்தது.

    தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் சுமார் 8 ஆயிரம் பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளனர். அவர்களில் கணிசமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் 4-வது அலை உருவாகிவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது நாடுமுழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனாவின் மறுதாக்கம் எண்ணிக்கை குறைந்து வருவதை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் மறுதாக்கத்தின் அளவு தொடர்ந்து குறைந்த படி உள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி எடுத்த ஆய்வின்படி கொரோனா வைரசின் மறுதாக்கம் 1.9 ஆக இருந்தது. தற்போது அது 1.5 ஆக குறைந்துள்ளது.

    கொரோனா பாதித்த ஒவ்வொருவரும் தலா 2 பேருக்கு அதை பரவ விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மறுதாக்கம் ஒன்று என்ற அளவுக்கு கீழ் குறையும்போது கொரோனா பரவல் வீழ்ச்சி அடையத் தொடங்கும்.

    தொற்றுநோய் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆய்வு படி கொரோனா வைரஸ் இன்னும் சில தினங்களுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும். அதன் பிறகு அது கட்டுப்பாட்டுக் குள் வந்துவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஆனால் மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு அலை ஏற்படும் போதும் இத்தகைய உயர்வு வருவது வழக்கமானது தான். பொதுமக்கள் முக கவசம் அணிந்து தங்களை தனிமைபடுத்திக்கொண்டால் பிறகு வைரஸ் பரவல் குறைந்துவிடும்.

    கொரோனா அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்தாலும் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் தற்போது தினமும் சுமார் 30 ஆயிரம் பேரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 740 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 269 பேர் ஆக்சிஜன் படுக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 59 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

    இணைநோய் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ நாயகம் அறிவுறுத்தி உள்ளார்.

    கொரோனா தாக்கம் இன்னும் சில தினங்களில் குறையும் என்று சொல்லி உள்ள நிபுணர்கள் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா வீழ்ச்சி 16 சதவீதமாக வந்திருப்பதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.

    டெல்லியில் 40 சதவீதமும், அரியானாவில் 27 சதவீதமும், உத்தரபிர தேசத்தில் 22 சதவீதமும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. விரைவில் தமிழகத்திலும் இதே நிலை வரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தாக்கம் 7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்தாலும் இன்னும் சில தினங்களில் அது குறையத் தொடங்கிவிடும் என்று நிபுணர்கள் பழைய கொரோனா அலையுடன் ஒப்பிட்டு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர்.

    Next Story
    ×