search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் தொடர்மழையால் 2000 ஏக்கரில் பூண்டு, கேரட் விளைச்சல் பாதிப்பு
    X

    கொடைக்கானலில் தொடர்மழையால் 2000 ஏக்கரில் பூண்டு, கேரட் விளைச்சல் பாதிப்பு

    • பூண்டு, கேரட் சாகுபடி செய்யப்படவேண்டிய வயலில் அதிகளவு ஈரப்பதம் உள்ளது.
    • விவசாயிகளின் வீடுகளும் இடிந்து சேதமடைந்துள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புவிசார்குறியீடு பெற்ற வெள்ளைப்பூண்டு, கேரட், உருளைக்கிழங்கு, பட்டானி, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

    மே மற்றும் ஜூன் மாதங்களில் சாகுபடி பணிகள் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் வழக்கத்திற்கு மாறாக தொடர் மழை காரணமாக சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொட்டிதீர்த்த கனமழையினால் எழும்பள்ளம் ஏரி, பேரிஜம், மன்னவனூர், கிளாவரை, பூண்டி, கூக்கால், கவுஞ்சி, கோணலாறு ஆகிய ஏரி மற்றும் அணைகள் நிரம்பி முழுக்கொள்ளளவில் உள்ளன.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் நடப்பாண்டில் மட்டும் அதிகபட்சமாக 381 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தற்போது மழை குறைந்து விட்டாலும் பலத்த காற்று வீசி வருகிறது. பூண்டு, கேரட் சாகுபடி செய்யப்படவேண்டிய வயலில் அதிகளவு ஈரப்பதம் உள்ளது. இதனால் வயலில் இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    பூண்டு செடியிலும் வெடிப்பு ஏற்பட்டு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே முதல் ஜூன் மாதம் வரையிலும், மேட்டுப்பாளையம் ரக பூண்டு சாகுபடி செய்யும் பணி தொடங்கியது. 90 நாட்கள் பயிரான பூண்டு சுமார் 1700 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பூண்டு பயிரின் தாழ்கள் பழுப்பு நிறத்தில் மாறிவிட்டன. தண்ணீர் தேங்கி நிற்பதால் அழுகல் நோயும் தாக்கியுள்ளது.

    இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. இதேபோல் கேரட் செடியிலும் அழுகல் நோய் பாதித்து விளைச்சல் குறைந்துள்ளது. 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கேரட் விவசாயிகளுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. 30 நாட்களுக்கு முன்னதாக அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் அதிகாரிகள் மேல்மலை கிராமங்களில் விவசாய பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த சாகுபடியை தொடர முடியாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    தொடர் மழையினால் நீர்வரத்து வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளதுடன் வயல்புரத்தில் உள்ள படிக்கட்டுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் வீடுகளும் இடிந்து சேதமடைந்துள்ளது. பல கிராமங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    Next Story
    ×