search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    X

    முதல்வர் சொன்னதை செய்யவில்லை... அது எட்டாக்கனியாகவே இருக்கிறது: அலிம் அல்புகாரி அதிருப்தி

    • புரோட்டோகாலை மீறி சென்றால்தான் அது தி.மு.க. என அலிம் அல்புகாரி கருத்து
    • ஒரு அமைச்சர் மீது செருப்பு எறிகிறார்கள், தூண்டிவிட்டவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டாமா?

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு துணை தலைவர் அலிம் அல்புகாரி, மாலை மலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். தற்போதைய திமுக அரசின் நிலைப்பாடு குறித்து அவர் பேசியதாவது:-

    செயல்பாடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, மக்களுக்கு ஒரு பயம் வந்துள்ளது. எதற்காக திமுகவை தேர்ந்தெடுத்தோமோ அந்த நோக்கமே அங்கு இல்லாமல் போய்விடுமோ? என்ற பயம் வந்துள்ளது. அது எதுவென்றால் மோடியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுதான்.

    புரோட்டோகால்படியே பிரதமரை வரவேற்றதாக சொல்கிறார்கள். அந்த புரோட்டாகாலுக்கு எதிராக அமர்பிரசாத் ரெட்டி என்பவர் அரசு விளம்பரத்தை சேதப்படுத்துகிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? எதிலாவது ஒன்றில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?

    ஒரு அமைச்சர் மீது செருப்பு எறிகிறார்கள். தூண்டிவிட்டவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டாமா? உங்கள் செயல்பாடு எதை காட்டுகிறது? புரோட்டோகாலை மீறி சென்றால்தான் அது திமுக. புரோட்டாகால், புரோட்டோகால் என அடங்கிப் போகும்போது, ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள்கூட அரசு விளம்பரத்தை சேதப்படுத்துவார்கள். அவர்களின் வாய்ச்சவடால்களுக்கு எல்லாம் நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால், நீங்கள் அடங்கிப் போய்விட்டீர்களோ என்று மக்கள் நினைப்பதை தவிர்க்க முடியாது.

    மனித குல எதிரி சித்தாந்தம் கொண்ட பாஜகவுடன் எப்போதும் நட்பு பாராட்டாத கட்சிதான் வேண்டும் என்பதால்தான் நான் காங்கிரசில் இருக்கிறேன். இல்லையென்றால் திமுகவுக்கு போகலாமே!

    பேரறிவாளனை விடுதலை செய்துவிட்டார்கள், அதை விட்டுவிடுவோம். அவரது விடுதலை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அதேசமயம், இன்னொரு சம நீதியை கேட்கிறோம். திமுக ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்று சொன்னார் முதல்வர். ஆனால், அது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

    பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தபோது, இவர்கள் இன்னும் பழைய கொள்கையில்தான் இருக்கிறார்கள், இன்னும் மொபைல் பயன்படுத்துகிறார்கள், அவர்களை விடுதலை செய்யக்கூடாது என திமுக அரசு பதில் அளித்துள்ளது. படிப்படியாக இவர்களின் செயல்பாடுகள் வெளிப்படுகிறது. இவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் சொன்னால், நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி விடுதலை செய்யலாம். ஆனால் அங்கு சென்று ஆட்சேபம் தெரிவிக்கிறீர்கள். அதேசமயம் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி நீதிமன்றம் செல்கிறீர்கள். இப்படி இரட்டை நிலைப்பாடு அவர்களிடம் உள்ளது.

    இவ்வாறு அலிம் அல்புகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×