search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரிசி விலை உயர்வு எதிரொலி- இட்லி, தோசை விலை உயர்கிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரிசி விலை உயர்வு எதிரொலி- இட்லி, தோசை விலை உயர்கிறது

    • அரிசி மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் ஓட்டல்களில் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
    • உயர்த்தப்பட்ட 5 சதவீத வரியால் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைளின் விலை 5 சதவீதம் உயரும்.

    சென்னை:

    மக்கள் அன்றாடம் சாப்பிடக்கூடிய பொருட்கள் மீதும் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்து வருகிறது. இதுவரையில் வரி விதிக்கப்படாமல் இருந்த அரிசி, தயிர் போன்ற உணவு பொருட்கள் மீது தற்போது ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி விவசாயிகள் உற்பத்தி செய்து தருகின்ற அரிசி புதிதாக ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்பட்டதால் அரிசி ஆலை மற்றும் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரிசி மீதான வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனாலும் அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது.

    அரிசி மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் ஓட்டல்களில் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அரிசியிலான உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், ஆனியன் ஊத்தப்பம் போன்ற உணவு பண்டங்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து சென்னை மாவட்ட ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது:-

    அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதால் உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ஓட்டல் உணவு பொருட்களுக்கு மட்டும்தான் இரட்டை வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஓட்டல் உணவு பண்டங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

    அரிசியில் இருந்துதான் இட்லி, தோசை வகைகள், பொங்கல் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இவை உள்பட டீ, காபி, வடை, பூரி, சப்பாத்தி மற்றும் அசைவ உணவுகள் அனைத்திற்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

    அப்படி இருக்கும்போது அரிசிக்கு தனியாக ஜி.எஸ்.டி. வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களைதான் பாதிக்கும். எந்த வரி விதித்தாலும் அந்த வரி சுமை இறுதியில் பொதுமக்களின் தலையில்தான் விழுகிறது.

    இதனால் ஓட்டல் தொழில் மேலும் பாதிக்கப்படும். ஏற்கனவே ஓட்டல்களில் விலை உயர்வால் வியாபாரம் குறைந்துள்ளது. கியாஸ், பால், மளிகை பொருட்கள், சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிப்பு போன்றவற்றால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்து இருப்பது இத்தொழிலை மேலும் நசுக்குவதாக அமைந்து உள்ளது.

    உயர்த்தப்பட்ட 5 சதவீத வரியால் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைளின் விலை 5 சதவீதம் உயரும். அதாவது 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கும்.

    தற்போது 2 இட்லி ரூ. 30-க்கும், தோசை வகைகள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. இவற்றின் விலை மேலும் உயரும்போது பொதுமக்கள் ஓட்டலுக்கு வரவே பயப்படுவார்கள். ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நடத்த முடியாமல் பலர் வெளியேறி விட்டனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து ஓட்டல் தொழில் மீது வரி விதிப்பதால் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    எனவே அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். ஒரு பொருளுக்கு பல வடிவில் வரி விதிப்பது முறையா? இது பொதுமக்களை கசக்கி பிழிவதற்கு சமம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜி.எஸ்.டி. வரி உயர்வால் வார இறுதிநாள் மற்றும் விசேஷ நாட்களில் ஓட்டலுக்கு செல்லக்கூடிய மக்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×