search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: 7, 8, 9-ந் தேதிகளில் கனமழை பெய்யும்
    X

    13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: 7, 8, 9-ந் தேதிகளில் கனமழை பெய்யும்

    • நாளை சில மாவட்டங்களில் பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • மாண்டஸ் புயல் தரையை நெருங்கிய பிறகு கொடூரமாக தாக்காமல் சற்று வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    அந்த குறைந்த காற்றழுத்தம் மேற்கு, வடமேற்கு திசைநோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது.

    இன்று மாலை அது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்பிறகு அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி தொடர்ந்து நகரும். நாளை (புதன்கிழமை) அதன் ஆற்றல் அதிகரிக்கும். இதனால் தமிழக கடலோர பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாளை அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிட்டுள்ளனர்.

    புயல் உருவாகிய பிறகு தொடர்ந்து அதன் பாதை மேற்கு, வடமேற்கு திசை நோக்கியே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த புயல் தமிழக கடலோரத்தை நோக்கி வர அதிக வாய்ப்பு உள்ளது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மாண்டஸ் புயல் நெருங்கி வரும். இதன் காரணமாக 8-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 13 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த 13 மாவட்டங்களுக்கும் 8-ந்தேதி சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சில மாவட்டங்களில் பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 9-ந்தேதியும் பலத்த மழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    9-ந்தேதி சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 12 மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு நிற மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், '7-ந்தேதி முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யத்தொடங்கும். 8-ந்தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என்றார்.

    மாண்டஸ் புயல் தரையை நெருங்கிய பிறகு கொடூரமாக தாக்காமல் சற்று வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் 7-ந்தேதி மற்றும் 8-ந்தேதிகளில் பலத்த தரைக்காற்று வீசும்.

    8-ந்தேதி மதியத்திற்கு பிறகு மழையின் அளவு சற்று குறையும். 9-ந்தேதிக்கு பிறகு பழைய நிலை திரும்பும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×