search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்- தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
    X

    சென்னை ஐகோர்ட்

    அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்- தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை

    • நீதிபதி உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

    சென்னை:

    சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த நபர்கள் நீண்டகாலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் சுகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, குத்தகைதாரர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை தொடங்கி உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

    ஆனால் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்று கூறி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டில் சுகுமார் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சமும், இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழக்கு செலவும் (அபராதம்) விதித்து உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    ஆணையர் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், 'அறநிலையத்துறை ஆணையர் பிரதான வழக்கில் எதிர் மனுதாரராக இல்லை. அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது தவறு. எனவே, அபராதம் விதித்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும்' என வாதிட்டார்.

    அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

    Next Story
    ×