என் மலர்

  தமிழ்நாடு

  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக தீவிர ஆலோசனை
  X

  ஓ பன்னீர்செல்வம்

  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக தீவிர ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் உள்ள தேவர் அமைப்புகள் சசிகலாவுடன் இணைந்து அ.தி.மு.க.வை மீட்டெடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
  • ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும்? என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  சென்னை:

  அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  இதன் தொடர்ச்சி ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

  இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகும்படி கூறியது.

  இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஓ.பன்னீர்செல்வம் அதில் இருந்து குணம் அடைந்தார். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான பெரிய குளத்துக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  நேற்று பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இன்று 2-வது நாளாக அவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

  கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய சட்டப் போராட்டம் மற்றும் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் ஆகியவை குறித்தும் நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டார்.

  தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துகளை கேட்டு வருகிறார். தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ள சையது கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

  அதில் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களை ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தார். உண்மையான அ.தி.மு.க. என்பது ஓ.பன்னீர்செல்வம் பக்கமே உள்ளது. அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்லக்கூடிய அனைத்து தகுதியும் அவருக்கு மட்டுமே உள்ளது.

  ஜெயலலிதாவின் விசுவாசியாகவும், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் விளங்கியதால்தான் அவருக்கு முதல்-அமைச்சர் பதவி கொடுத்து ஜெயலலிதா அழகு பார்த்தார். அவருக்கு பின்னரும் கட்சியையும், ஆட்சியையும் தலைமையில் இருந்து வழிநடத்தினார்.

  தொண்டர்கள் எப்போதும் அவரை அ.தி.மு.க.வின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக எப்போதோ பார்க்கத்தொடங்கி விட்டனர் என நிர்வாகிகள் தெரிவித்ததாக சையதுகான், ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினார்.

  மேலும் அவர் கூறுகையில், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனை கட்சியில் இணைத்து அ.தி.மு.க.வை மீட்டெடுக்க போராடுவோம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம்' என்றார்.

  இதனிடையே தமிழகத்தில் உள்ள தேவர் அமைப்புகள் சசிகலாவுடன் இணைந்து அ.தி.மு.க.வை மீட்டெடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

  இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும்? என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மாவட்டம் தோறும் சென்று நிர்வாகிகளை சந்திப்பதா? அல்லது தற்போதே அதனை தொடங்குவதா? என்றும் தீவிர ஆலோசனை செய்து வருகிறார்.

  பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி எவ்வாறு முதல்-அமைச்சர் பதவிக்கு வந்தார்? தற்போது பதவிக்காக அவர் எவ்வாறு செயல்படுகிறார்? என்பது குறித்து மக்களிடம் விளக்க ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும், நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நகர்வு அ.தி.மு.க. மட்டுமின்றி அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×