search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 364 கனஅடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 364 கனஅடியாக அதிகரிப்பு

    • மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.
    • ஆடி அமாவாசையான இன்று காலை முதலே மேட்டூர், பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    தற்போது 2 அணைகளில் இருந்தும் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல் வருகிறது.

    ஒகேனக்கலில் நேற்று16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 19-வது நாளாக தடை நீடிக்கிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 16 ஆயிரத்து 204 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 16 ஆயிரத்து 364 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையில் இருந்து மொத்தம் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல்போல காட்சியளிக்கிறது. ஆடி அமாவாசையான இன்று காலை முதலே மேட்டூர் மற்றும் பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து வருகிறார்கள். மேலும் மேட்டூர் அணையையும் பார்வையிட்டு வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×