search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மாவட்டத்தில் இன்று கனமழை- திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
    X

    குமரி மாவட்டத்தில் இன்று கனமழை- திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 14 அடியை எட்டியது.
    • ரப்பரும் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கனமழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது. நாகர்கோவிலில் அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. காலை பெய்ய தொடங்கிய மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். கனமழையின் காரணமாக மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, மீனாட்சிபுரம் சாலை, வடசேரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கன்னியாகுமரியில் காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை தூறி கொண்டே இருக்கிறது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல், குலசேகரம், மார்த்தாண்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    காலை முதலே பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் அழைத்துச்செல்ல முடியாமல் அவதிக்கு ஆளானார்கள். முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 12.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து இன்று காலை நிலவரப்படி 2114 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையி லிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.45 அடியாக இருந்தது. அணைக்கு 1470 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 281 கனஅடி தண்ணீரும், உபரிநீராக 2114 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.77 அடியாக உள்ளது. அணைக்கு 922 ஜனவரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 450 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.73 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.82 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 14 அடியை எட்டியது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    தோவாளை, செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி பகுதிகளில் செங்கல் சூளைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். குலசேகரம், கீரிப்பாறை கடிகாரம் கோணம் பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பரும் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×