search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி முழுவதும் பரவலாக கனமழை: செக்காரகுடியில் 4 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
    X

    முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியில் சாலைகள் தண்ணீரில் மிதந்த காட்சி.

    தூத்துக்குடி முழுவதும் பரவலாக கனமழை: செக்காரகுடியில் 4 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    • கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள செக்காரகுடியில் உள்ள பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • போலீஸ் நிலையம் முன்புள்ள மெயின் ரோட்டில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில் இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 80 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 64.10 மில்லிமீட்டரும், மணியாச்சியில் 63 மில்லிமீட்டரும், திருச்செந்தூரில் 60 மில்லிமீட்டரும், கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தலா 55 மில்லிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவானது. இதே போல் தூத்துக்குடி, காயல்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம், காடல்குடி, வைப்பாறு, சூரங்குடி, வேடநத்தம், கீழஅரசரடி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

    கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள செக்காரகுடியில் உள்ள பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து செக்காரகுடியில் உள்ள 4 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு மேல்நிலைப்பள்ளி, 3 தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    மாவட்டத்தில் நேற்று 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. குறிப்பாக கோவில்பட்டியில் பெய்த கனமழையால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது.

    கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியில் உள்ள பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 3 அடி உயரத்துக்கும் மேலாக மழை வெள்ளம் தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென்று சுரங்கப்பாதையின் நடுவில் மழைநீர் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் அந்த பஸ்சில் இருந்த சுமார் 28 பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று கயிறு கட்டி, பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தில் கயிறு கட்டி இழுத்து பஸ்சையும் மீட்டனர்.

    போலீஸ் நிலையம் முன்புள்ள மெயின் ரோட்டிலும் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்தனர். தொடர்ந்து தேங்கிய பகுதியில் தண்ணீரை அகற்றும் பணியில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×