search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமாரபாளையத்தில் பலத்த மழை- பள்ளி உள்பட 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
    X

    வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ள காட்சி.

    குமாரபாளையத்தில் பலத்த மழை- பள்ளி உள்பட 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

    • நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
    • குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மோளியப்பள்ளி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் வெள்ளம் புகுந்தது.

    நாமக்கல்:

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதன் காரணமாக விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து 55 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதைத்தவிர நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை போன்றவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இதனிடைய குமாரபாளையத்தில் நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. அந்த சமயத்தில் ஓலப்பாளையம் ஏரி முழுவதுமாக நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து வெளியேறியது. ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஓலப்பாளையம் ஓடையை மூழ்கடித்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. குறிப்பாக பெரியார்நகர், கம்பன் நகர் உள்பட 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓடையை ஒட்டி இருக்கும் வீடுகளின் படிக்கட்டுகள், சிமெண்ட் சாலைகளில் வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மோளியப்பள்ளி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வெள்ளம் இடுப்பு அளவுக்கு ஆர்ப்பரித்து செல்வதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குமாரபாளையம் நகராட்சி சார்பில் வெள்ள நீரை முழுவதுமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு தெருவிலும் வருவாய் துறை சார்பில் அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×