search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரியில் சாரல் மழை நீடிப்பு- முக்கடல் அணை நீர்மட்டம் 6.70 அடியாக சரிவு
    X

    குமரியில் சாரல் மழை நீடிப்பு- முக்கடல் அணை நீர்மட்டம் 6.70 அடியாக சரிவு

    • நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.95 அடியாக உள்ளது. அணைக்கு 185 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆனி, ஆடி மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டு ஆனி மாதம் பிறந்தது முதல் சூறைக்காற்று வீசி வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    இரணியல், பாலமோர், திற்பரப்பு, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, தக்கலை, குழித்துறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.75 அடியாக இருந்தது அணைக்கு 507 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 631 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.95 அடியாக உள்ளது. அணைக்கு 185 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 260 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.89 அடியாக உள்ளது. அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.98 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 30.18 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கூடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 6.70 அடியாக உள்ளது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த பிறகும் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்துகொண்டே செல்வதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க மாநகராட்சி அதிகாரிகள் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×