search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காட்டில் தொடரும் கனமழை- 100 இடங்களில் மண் சரிவு
    X

    ஏற்காடு கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிந்து கிடக்கும் காட்சி.

    ஏற்காட்டில் தொடரும் கனமழை- 100 இடங்களில் மண் சரிவு

    • ஏற்பாடு மலைபாதையில் 60 அடி பாலம், 40 அடி பாலப்பகுதியில் அதிக அளவில் மண் சரிந்து சாலை சேதம் அடைந்தது.
    • சேலம் மாநகரில் 2-வது நாளாக நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரம் கன மழையாக கொட்டியது

    ஏற்காடு:

    சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று முன்தினம் 3 மணி நேரம் கன மழை கொட்டியது. தொடர்ந்து நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 12 மணி வரை 2 மணி நேரம் கன மழையாக கொட்டி தீர்த்தது.

    இதனால் அங்குள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. ஏற்காடு மலைப்பாதையில் புதிது புதிதாக அருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டியது. ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    மேலும் ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு வாகனங்கள் செல்லும் முக்கிய மலை பாதையான அஸ்தம்பட்டி வழியாக அடிவாரத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதில் குறிப்பாக ஏற்பாடு மலைபாதையில் 60 அடி பாலம், 40 அடி பாலப்பகுதியில் அதிக அளவில் மண் சரிந்து சாலை சேதம் அடைந்தது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையில் மரங்கள் சரிந்து விழுந்தது.

    இதனால் நேற்றிரவு 10 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அனைத்து வாகனங்களும் குப்பனூர் வழியாக மாற்றி விடப்பட்டன. தொடர்ந்து ஏற்காடு மலைப்பாதையை ஜே.சி.பி .எந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே 2-வது கொண்டை ஊசி வளைவில் சாலை ஏற்கனவே சேதம் அடைந்து சாக்கு மூட்டைகள் அடுக்கி வாகனங்கள் சென்று வந்தன. தற்போது அந்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் நிலை உள்ளது. அப்படி மண் சரிவு ஏற்பட்டால் மேலும் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து பாதிக்கும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் 60 அடிப்பாலப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை எந்திரங்கள் உதவியுடன் சரி செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வயைிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணியை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளையும் பார்வையிட்டார்.

    ஏற்காடு அடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் 20 கி.மீ. சுற்றி குப்பனூர் வழியாக ஏற்காட்டிற்கு சென்று வருகிறார்கள். ஒரே வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருவதால்பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

    சேலம் மாநகரில் 2-வது நாளாக நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இதனால் அம்மாப்பேட்டை, பச்சப்பட்டி, தாதகாப்பட்டி, அரிசிபாளையம், பெரமனூர், கிச்சிப்பாளையம் நாராயண நகர், பள்ளப்பட்டி திருவாகவுண்டனூர் பைபாஸ் உள்பட பல பகுதிகளில் சாலைகளில் சாக்கடை நீருடன், தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    இதில் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதிகளில் வசித்த மக்கள் தூங்க முடியாமல் விடிய விடிய தவித்தனர்.

    மேலும் ஏற்காட்டில் கன மழை பெய்ததால் அங்குள்ள வெள்ளம் சேலம் பெரமனூர், சாமிநாதபுரம் பகுதிகளில் புகுந்தது . இதில் பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் தனியாக குடியிருந்த ருக்குமணி என்ற 70 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இதில் அவர் வெளியில் வர முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்தார்.

    இதேபோல சாமிநாதபுரம் ரெத்தினம் தெருவில் தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (வயது 80) என்பவரது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இந்த தண்ணீரில் சிக்கி அவரும் உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர்.

    தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ஆணையாளர் கிறிஸ்துராஜ், மண்டல தலைவர்கள் கலையமுதன், உமாராணி, ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி ஆகியோர் இன்று காலை அந்த பகுதிகளை பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதேபோல கெங்கவல்லி, வீரகனூர், கரிய கோவில் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    சிற்றாறுகள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 58 மி.மீ. மழை பெய்துள்ளது. கெங்கவல்லி 20, வீரகனூர் 20, கரியகோவில் 17, சேலம் 11.7, ஓமலூர் 11, காடையாம்பட்டி 5, சங்ககிரி 2.1, எடப்பாடி 1.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 146.20 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.

    Next Story
    ×