search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கும் பணி 5-ந்தேதி தொடக்கம்: நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்
    X

    ஆதிச்சநல்லூரில் 'சைட் மியூசியம்' அமைக்கும் பணி 5-ந்தேதி தொடக்கம்: நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்

    • கண்ணாடி பேழை அமைத்து பார்வையாளர் பார்வையிடவும் பணி நடந்து வருகிறது.
    • இந்தியாவிலே முதல் முதலில் சைட் மியூசியம் அமைவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    செய்துங்கநல்லூர்:

    மத்திய அரசு சார்பில், தாமிரபரணி கரையில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார்.

    இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆதிச்சநல்லூர் பரம்பில் சைட் மியூசியம் அமைக்கவும், அதன் மேல் கண்ணாடி பேழை அமைத்து பார்வையாளர் பார்வையிடவும் பணி நடந்து வருகிறது.

    உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், அப்போதைய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ் உதவியுடன் ஆதிச்சநல்லூர் மக்கள் சார்பில் இந்த இடங்களை இலவசமாக வாங்கி கொடுத்தார். இதனால் இங்கு பணிகள் மிக விரைவாக நடந்தது. இந்தியாவில் 5 இடத்தில் மியூசியம் அமைக்கும் பணியில், முதல் முதலாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டு திறப்பதற்கு தயாராக உள்ளது.

    இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் கூறியதாவது:-

    சைட் மியூசியம் என்பது இந்தியாவில் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போது 'பி' சைட்டில் கண்ணாடி மூலம் உள்ளது உள்ளபடியே தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் அதன் மீது கண்ணாடி பேழைகள் அமைத்து அதன் வழியாக பொருள்களை பயணிகள் பார்க்கும் வண்ணம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளே விளக்குகள் பொறுத்தப்பட்டு பார்க்கும் பார்வையாளர்களுக்கு முதுமக்கள் தாழிகள், அதனுள் கிடைத்த பொருள்கள் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சைட் மியூசியத்தினை சுற்றி பூங்கா மற்றும் புகைப்பட காட்சி அமைத்து உள்ளே வரும் தொல்லியல் ஆர்வலர்களை திருப்திபடுத்தும் வண்ணம் அமைத்து வருகிறோம் என்று கூறினார்.

    இதற்கான பணி இரவு பகலாக நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக கண்ணாடி பேழை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. மேலும் இருபுறமும் மூங்கில் மறைவு கொண்டு அடைக்கும் பணி நடந்து வருகிறது.

    கண்ணாடி பேழைக்குள் முதுமக்கள் தாழி இருக்கும் இடம் பார்வையாளர்களுக்கு மிகவும் விசேஷமாக தெரிய மின்விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த சைட்டை சுற்று வர தடுப்பு கம்பி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    ஐரோப்பா, சீனா, மேற்கு ஆசியா கண்டத்திற்கு நிகரான இந்த சைட் மியூசியம் ஆதிச்சநல்லூர் அமைய இருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1876ல் இந்தியாவில் முதல் முதலில் அகழாய்வு நடந்த ஆதிச்சநல்லூரில் சுமார் 147 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிலே முதல் முதலில் சைட் மியூசியம் அமைவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் இயக்குனர் முனைவர் அருண்ராஜ் தலைமையில் டெல்லி தொல்லியல் கண்காணிப்பாளர் அணில் சிங், டெல்லி துணை தொல்லியல் கண்காணிப்பாளர் அறவாழி, தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார், பொறியாளர் கலைச்செல்வன் உள்பட அதிகாரிகள் இரவு பகலாக இந்த தொல்லியல் சைட் மியூசியம் பணியை பார்வையிட்டு வருகின்றனர்.

    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை நாளை மறுநாள் (5-ந்தேதி) காலை 10 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். இதற்காக தனி மேடை அமைக்கும் பணி பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×