search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 445 லாட்ஜூகளில் அதிரடி சோதனை
    X

    சென்னையில் 445 லாட்ஜூகளில் அதிரடி சோதனை

    • எழும்பூர், பெரியமேடு, திருவல்லிக்கேணி உள்பட அனைத்து பகுதிகளிலும் லாட்ஜுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டியவர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறின.

    பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை தொடர்ந்து பெரியார் - அண்ணா சிலைகளும் அவமதிக்கப்பட்டன.

    தாம்பரம் சிட்லப்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாகவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் சென்னை மாநகரில் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடும் எண்ணத்தில் மர்ம நபர்கள் யாரேனும் லாட்ஜுகளில் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறியும் நோக்கத்தில் 445 லாட்ஜுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    எழும்பூர், பெரியமேடு, திருவல்லிக்கேணி உள்பட அனைத்து பகுதிகளிலும் லாட்ஜுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சோதனையின்போது தலைமறைவு குற்றவாளிகள் யாரேனும் பதுங்கி உள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. போதை பொருட்களுடன் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? விசா காலம் முடிந்த பின்னரும் வெளிநாட்டினர் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று லாட்ஜ் உரிமையாளர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர். சட்டவிரோதமாக யாரையாவது தங்குவதற்கு அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை மாநகர் முழுவதும் 98 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்தனர். அப்போது அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டது.

    மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டியவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. மொத்தம் 52 வாகனங்கள் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிடிவாரண்டு குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் மீதும், குட்கா விற்பனை தொடர்பாக 2 பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த சோதனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு குற்றச்சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×