search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவல்துறை
    X
    காவல்துறை

    மதுவிருந்தில் பொறியாளர் உயிரிழந்த விவகாரம்- தனியார் பாருக்கு சீல் வைத்த காவல்துறை

    போதை விருந்தில் பங்கேற்று மயங்கி விழுந்த பிரவீன் என்பவர், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார்.
    சென்னை:

    சென்னை கோயம்பேடு அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள பாரில் நேற்று நள்ளிரவு ஆடல், பாடலுடன் மது விருந்து நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுவிருந்தில் பங்கேற்றுள்ளனர். சட்டவிரோதமாக மதுவிருந்து நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் திருமங்கலம் போலீசார் அங்கு சென்று, அனைவரையும் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தினர். பலர் போதை மயக்கத்தில் இருந்ததால் அவர்களால் வெளியேற முடியாமல் தள்ளாடியபடி இருந்தனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர்.

    அப்போது போதை விருந்தில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்(வயது23) என்பவர் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு, சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போதையில் இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அவர் இறந்தார். என்ஜினீயரான பிரவீன், பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவிருந்தில் கலந்து கொண்டவர்களில் 89 பேர் 21 வயதுக்குக் குறைவானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விருந்தின் போது தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. முதற்கட்ட நடவடிக்கையாக அந்த மாலில் உள்ள தனியார் பாருக்கு போலீசார் சீல் வைத்தனர். 

    சென்னை மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான கூடங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×