search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுடுமண் உறை கிணறு
    X
    சுடுமண் உறை கிணறு

    தஞ்சையில் கருணாசுவாமி கோவில் குளத்தை தூர்வாரியபோது 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

    உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து பொதுமக்கள் ஏராளமானோர் தீர்த்த குளத்திற்கு வந்து உறை கிணறை பார்வையிட்டு செல்கின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே கரந்தையில் 1400 ஆண்டுகள் பழமையான கருணாசுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால சோழனுக்கு கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்தது. அவர் அந்த நோயை தீர்க்க பல மருத்துவ முறையை கையாண்டும் பலனில்லையாம். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய கருணாசாமி, கோவில் தீர்த்தக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் தோல் நோய் நீங்கும் என கூறினாராம். அதன்பேரில் கரிகாலசோழன் இந்த குளத்தில் நீராடியதில் நோய் நீங்கியது.

    பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் சிவனடியார்கள் குளத்தை மீட்க வேண்டும் என போராடி மீட்டனர். மேலும் குளத்துக்கு நீர் வழிப்பாதையையும் கண்டறிந்தனர். பின்னர் தஞ்சை வடவாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று காலை பணி மும்முரமாக நடந்தது. அப்போது குளத்தை தோண்டும்போது 3 அடி விட்டத்தில் சுடுமண் உறை கிணறு ஒன்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து தண்ணீர் ஊறிக் கொண்டிருந்தது.‌ இதனைப் பார்த்து சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதனால் மேலும் குளத்தைத் தோண்டினால் பல்வேறு உறைக்கிணறுகள் தென்படும் என நினைத்தனர்.

    அதன்படி குளத்தில் தொடர்ந்து தூர்வாரும் போது அடுத்தடுத்து 6 உறைக்கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து குளத்தை முழுமையாக தூர்வாரினால் மேலும் பல உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்தனர்.

    இதனால் குளத்தில் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உறைக் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்டதை அறிந்து பொதுமக்கள் ஏராளமானோர் தீர்த்த குளத்திற்கு வந்து உறை கிணறை பார்வையிட்டு செல்கின்றனர்.

    Next Story
    ×