search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேரறிவாளனுக்கு அற்புதம்மாள் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.
    X
    பேரறிவாளனுக்கு அற்புதம்மாள் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.

    பேரறிவாளன் விடுதலை: மாநில உரிமையை மீட்டு எடுத்துள்ளோம்- அற்புதம்மாள்

    விடுதலைக்காக அனைத்து அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, இந்த சமுதாயத்திற்கு பாடுபடுகின்ற அனைத்து இயக்கங்கள் என சாதாரண தொண்டர்கள் கூட குரல் கொடுத்துள்ளனர் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.
    கோவை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக பாடுபட்டவர்களையும், குரல் கொடுத்தவர்களையும் பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம்மாளும் நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

    தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணனை அவர்கள் இன்று கோவையில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    31 ஆண்டுகால போராட்டம் இது. பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதைவிட மாநில உரிமையை மீட்டு எடுத்துள்ளோம் என்பதை தான் இங்கு சொல்ல வேண்டும். இந்த போராட்டத்தின் மூலம் பெரிய வேலை சாத்தியப்பட்டது. இது மகிழ்ச்சியாக உள்ளது. பேரறிவாளன் விடுதலையானது உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இது ஒரு அமைதிப் போராட்டம். நாம் யாரையும் எதிர்க்கவில்லை. வன்முறையை கையாளவில்லை. நமது குறிக்கோள் என்னவென்றால் மாநில உரிமை வீணாகப்போகிறது. இதன் மூலம் இவர்களுடைய விடுதலை தடுக்கப்படுகிறது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் நீண்ட பெரிய சட்டப் போராட்டம் நடத்தினோம்.

    அதன் மூலம் விடுதலையாகியுள்ளார். மற்றவர்களுக்கும் இது வாய்ப்பாக இருக்கும். அதனால் நாம் அமைதியாக இருக்க வேண்டும். இதேபோல் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம். விடுதலைக்காக அனைத்து அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, இந்த சமுதாயத்திற்கு பாடுபடுகின்ற அனைத்து இயக்கங்கள் என சாதாரண தொண்டர்கள் கூட குரல் கொடுத்துள்ளனர். முகம் தெரியாத அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பேரறிவாளன் கூறும் போது, 31 ஆண்டுகால நீதிக்கான போராட்டத்தில் தமிழகத்தில், குறிப்பாக இந்த கோவையில் கு. ராமகிருஷ்ணனின் போராட்டமும், அவர் இந்த வழக்கில் காட்டிய அக்கறையும் அனைவருக்கும் தெரியும். அதற்காக அவரை சந்தித்து நன்றி சொல்ல வந்துள்ளேன். மற்றும் அனைத்து கட்சி நண்பர்கள் மற்றும் அனைத்து கட்சியைச் சார்ந்தவர்கள் என அனைவரும் உதவியாக இருந்து இருக்கிறார்கள். எனவே அவர்கள் எல்லோரையும் பார்த்து நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்து இருக்கின்றேன் என்றார்.

    கு. ராமகிருஷ்ணன் கூறுகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை பெற்றுள்ளோம். 31 ஆண்டுகளுக்குப் பின்னால் விடுதலையடைந்து இருக்கின்ற பேரறிவாளனுக்கும், தமிழ்நாட்டு உரிமைகளுக்கு ஒரு விடிவைத் தேடித் தந்தவர் அற்புதம்மாள் என்றார்.
    Next Story
    ×