search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம்
    X
    கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

    குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 3வது நாளாக பயங்கர கடல் சீற்றம்

    கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே ஒருபுறம் கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்வானது. மறுபுறம் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

    இதுபோல பவுர்ணமி, அமாவாசை தினங்களிலும் கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இன்று 3வது நாளாக கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்புடனும், அலைகள் பனை மர உயரத்திற்கும் எழுந்தது.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, கீழமணக்குடி மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் கிளம்பி ஆக்ரோஷமாக வீசின. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு இந்த ராட்சத அலைகள் ஆக்ரோசமாக எழும்பி கரையை நோக்கி வந்து தொட்டுவிட்டுச்சென்றன. ஒரு சில பகுதிகளில் கடல் நீர்மட்டம் தாழ்வாகி சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்த கடல் சீற்றத்தினால் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே ஒருபுறம் கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்வானது. மறுபுறம் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அதன் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைத்தது.

    இதைத்தொடர்ந்து படகில்சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்ப்பதற்காக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    Next Story
    ×