search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில்
    X
    ரெயில்

    சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே மின்சார ரெயில் சேவை கடும் பாதிப்பு

    தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் மக்களின் இதயமாக இருந்து வரும் மின்சார ரெயில் அன்றாட வாழ்வின் அங்கமாக திகழ்ந்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவை இன்று கடுமையாக பாதித்தது. கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரெயில்கள் இன்று காலையில் முறையான அட்டவணைப்படி இயக்க முடியவில்லை.

    தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    சேத்துப்பட்டு, எழும்பூர், சைதாப்பேட்டை ஆகிய நிலையங்களில் வழியில் நின்றன. குறைவான வேகத்திலும், ஆங்காங்கே நின்று நின்று ரெயில்கள் இயக்கப்பட்டன. சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரெயில்கள் குறித்த நேரத்திலும், வேகத்திலும் இயக்க முடியவில்லை.

    இதனால் காலையில் வேலைக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். மழையால் திடீரென சிக்னல் இயங்காததால் மின்சார ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. காலை 7 மணி முதல் 8.30 மணிவரை இந்த பாதிப்பு இருந்தது. பின்னர் சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டது.

    இதேபோல வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்பாதை அறுந்து விழுந்தது. இதனால் சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே சேவை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது.

    சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்களும் அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த ரெயில்களும் வழியில் நின்றன.

    ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், அம்பத்தூர் ஆகிய நிலையங்களில் வழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    புறநகர் பகுதியில் இருந்து வேலைக்கு வரக்கூடிய மக்கள் அவதிப்பட்டனர். ரெயில்களை தொடர்ந்து அந்த பாதையில் இயக்க முடியாததால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லக்கூடிய பாதையில் மாற்றி இயக்கப்பட்டன.

    நீண்டநேரம் மின்சார ரெயில்கள் ஓடாமல் நின்றதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

    இதற்கிடையில் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் ஒவ்வொன்றாக சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது. ஆனாலும் காலையில் அலுவலக வேலை நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    நீண்டநேரம் மின்சார ரெயில்கள் ஓடாமல் நின்றதால் பெரும்பாலான பயணிகள் நெரிசலில் பயணம் செய்தனர்.

    மின்சார ரெயில் சேவை பாதிப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தின. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    இதற்கிடையே அறுந்து விழுந்த மின்வயரை சீரமைக்கும் பணி ரெயில்வே ஊழியர்கள் மூலம் விரைவு படுத்தப்பட்டது. அதனை சரி செய்த பின்னர் வழக்கம்போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இருப்பினும் 2 மணிநேரம் மின்சார ரெயில்சேவை பாதிக்கப்பட்டன.

    Next Story
    ×