search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குண்டாறு அணை
    X
    குண்டாறு அணை

    வாட்டி வதைக்கும் கோடை வெயில்- நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சரிவு

    தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் அணையின் தடுப்பு சுவரை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செங்கோட்டை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    ஏற்கனவே சாகுபடி பணிக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில் கோடை வெயிலின் காரணமாகவும் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர் மட்டம் குறைந்து உள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 46.70 அடி நீர் இருப்பு உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் மட்டும் 83.60 அடி நீர் இருப்பு உள்ளது. நம்பியாறு அணையில் 13 அடியும், வடக்கு பச்சையாறு அணையில் 21.25 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா அணையில் 29 அடியும், ராமநதியில் 25 அடியும், அடவி நயினாரில் 41.50 அடியும் நீர் இருப்பு உள்ளது. மிகச்சிறிய அணையான 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை வறண்டு விட்டது. அதில் 11 அடி நீர் இருந்தாலும், அவை சகதியாகவே உள்ளது.

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த அணை எப்போதும் மழை காலங்களில் முதலில் நிரம்பிவிடும்.

    இதன் மூலம் சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் நெல்சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நீரினால் தஞ்சாவூர்குளம், செங்கோட்டை பகுதி குளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்றுவாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு பல்வேறு கோரிக்கைக்கு பின் சீரமைக்கபட்டது.

    இந்நிலையில் தற்போது அணையின் சுவர் சேதமடைந்து உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் அணையின் தடுப்பு சுவரை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×