search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கி கணக்குகள்
    X
    வங்கி கணக்குகள்

    தமிழகம் முழுவதும் வேட்டை: 16 கஞ்சா வியாபாரிகளின் 47 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன

    தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி கடந்த மாதம் 28ந்தேதி முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தீவிர வேட்டை நடந்து வருகிறது.

    இதில் கடந்த 31 நாட்களில், 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய 197 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 44.9 டன் குட்கா மற்றும் 13 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

    திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் மூன்று கஞ்சாவியாபாரிகளின் 10 வங்கிக் கணக்குகளும், 6 நிலம், வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும் முடக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முக்கியமான 7 கஞ்சா வியாபாரிகளின் 29 வங்கிக் கணக்குகளும், நான்கு நிலம், வாகனம் உட்பட்ட சொத்துக்களும் மற்றும் தேனி மாவட்டத்தில் ஆறு கஞ்சா கடத்தல் குற்றவாளிகளின் 8 வங்கிக் கணக்குகள், வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 16 பேரின் 47 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த சிறப்பு நடவடிக்கையில் அதிகபட்சமாக போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு 963 கிலோ, ரெயில்வே காவல் படை 734 கிலோ, திருவள்ளூர் மாவட்டத்தில் 208 கிலோ, சென்னை மாநகரத்தில் 186 கிலோ, நாகை மாவட்டத்தில் 168 கிலோ, கோவை மாவட்டத்தில் 161 கிலோ கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×