
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
மாதந்தோறும் திருவிழா என வருடம் முழுவதும் பழனி நகர் விழாக்கோலம் பூண்டிருக்கும். முக்கிய திருவிழாக்களான தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் பக்தர்கள் அலைகடல் என திரண்டு வருவார்கள்.
மேலும் வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்ததால் அடிவாரம், கிரிவீதி, பஸ் நிலையம், திருஆவினன்குடி கோவில், விஞ்ச் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் அதிக அளவில் வந்தபோது இன்று வருகை மேலும் அதிகரிப்பதால் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் விஞ்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கிரி வீதியில் ஆட்டம் பாட்டத்துடன் காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதிக அளவு வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 வருடங்களாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது முழு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதால் பக்தர்கள் கோவில்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.