search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுற்றுலா பயணிகள் குற்றலாம் மெயின் அருவியில் குளித்து மகிழ்வதை காணலாம்
    X
    சுற்றுலா பயணிகள் குற்றலாம் மெயின் அருவியில் குளித்து மகிழ்வதை காணலாம்

    தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தொடர் கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு வாரமாக தொடர்ந்து கோடைமழை பெய்து வந்த நிலையில், நேற்று முதல் குறையத்தொடங்கி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகர பகுதியில் பாளையில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணைகளான மணிமுத்தாறு, கொடுமுடியாறு மற்றும் பாபநாசம் அணை பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 16 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு அணையில் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 24 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 34 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆம்பூர், வி.கே.புரம், டானா, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மாலையில் விட்டு விட்டு மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே மழை குறைந்துவிட்டது. அணை பகுதிகளில் மட்டும் சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று அணை பகுதிகளிலும் மழை பெய்யவில்லை. வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. எனினும் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் அடவிநயினார் அணைக்கு நீர் வந்து கொண்டிருந்தது.

    இதனால் இன்று மேலும் 1 அடி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது 132 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 27 அடி நீர் இருப்பு உள்ளது. கருப்பாநதி, கடனா நதி, ராமநதி, குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை.

    இதேபோல் மாவட்டத்தில் கடையநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட இடங்களில் பகலில் வெயில் அதிகமாக இருந்தது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தொடர் கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் அங்கு திரண்டு வருகின்றனர்.

    தமிழ்புத்தாண்டு உள்ளிட்டவை காரணமாக 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குடும்பத்தினருடன் அருவிகளுக்கு குவிந்தனர். அவர்கள் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, செண்பகாதேவி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.


    Next Story
    ×