search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    பள்ளி மாணவியை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பட்டதாரி பெண் கைது

    நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவியை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பட்டதாரி பெண் மற்றும் அவருக்கு உதவியவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சென்னை:

    சென்னை வடபழனியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் தனியார் வேனில் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை மாணவி வழக்கம் போல வேனில் பள்ளிக்கு சென்றார்.

    ஆனால் பள்ளி முடிந்ததும் அவர் வேனில் ஏறுவதற்கு வரவில்லை. இதனால் வேன் டிரைவர் பள்ளிக்கு சென்று மாணவியை தேடினார். ஆனால் அவரை காணவில்லை. இதையடுத்து பள்ளி முதல்வரிடம் தகவல் தெரிவித்த அவர், ‘மாணவியின் பெற்றோரிடம் மாணவியை காணவில்லை என்று கூறினார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் பள்ளி முதல்வரிடம் மாணவி காணாமல் போனது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மாணவி தந்தையின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் ஒரு பெண் பேசினார். உங்கள் மகள் என்னிடம் பத்திரமாக உள்ளார். நீங்கள் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மாணவியை விட்டு விடுகிறோம். இன்னும் அரைமணிநேரத்தில் நான் சொல்லும் இடத்துக்கு பணத்தை கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதையடுத்து மாணவியின் தந்தை நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமி‌ஷனர் அலுவலகம் சென்று புகார் செய்தார். உதவி கமி‌ஷனர் ரவி ஆபிரகாம் விசாரணை நடத்தி மாணவியின் தந்தையிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்து கடத்தல் பெண் கூறிய இஜாஸ் அகமது என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் கடைக்கு நேரில் சென்று கொடுத்துள்ளார்.

    பின்னர் மாணவியின் தந்தை அந்த பெண்ணுக்கு போன் செய்து பணம் கொடுத்து விட்டேன். எனது மகள் எங்கே என்று கேட்டார். எதிர்முனையில் பேசிய பெண் உங்கள் மகளை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் அருகில் விட்டதாக கூறினார்.

    இதையடுத்து மாணவியின் தந்தை அங்கு விரைந்து சென்று மகளை மீட்டார். பின்னர் மகளை அழைத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்றார். இதற்கிடையில் உதவி கமி‌ஷனர் ரவி ஆபிரகாம் தலைமையிலான போலீசார் பணம் கொடுத்த வட பழனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடை அருகில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அங்கு வைத்து இஜாஸ் அகமதுவையும், மாணவியை கடத்தியதாக போனில் பேசிய பெண்ணையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த கடத்தல் பெண்ணின் பெயர் மோசினா பர்வின் என்றும், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் எம்.ஏ. பட்டதாரி ஆவார். இவரது கணவர் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார்.

    மோசினா பர்வீன் போலீசாரிடன் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    நான் ராயப்பேட்டையில் நகைக்கடை நடத்தும் ஒருவரிடம் கடனாக ரூ.5 லட்சம் வாங்கினேன். அந்த பணத்தை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து நகை கடைக்காரர் என்னிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து நேற்று பணத்தை திருப்பி தருவதாக நான் கூறியிருந்தேன்.

    எனது தூரத்து உறவினருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். பணத்திற்காக எனது உறவினரின் 2-வது மகளை கடத்தலாம் என்று நினைத்தேன். இதற்காக மாணவியின் உறவினர் என்று பள்ளி முதல்வரை சந்தித்து மாணவியை பார்க்க வேண்டும் என்றேன். அதற்கு மாணவி விடுமுறை எடுத்திருப்பதாக பள்ளி முதல்வர் கூறினார்.

    அதன்பிறகு பள்ளியில் இருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது நான் கடத்தி சென்ற 10-ம் வகுப்பு மாணவியை பார்த்தேன். அவரிடம் நான் உனது அம்மாவின் சிறுவயது தோழி என்று கூறி மாணவியை பள்ளிக்கு வெளியே அழைத்து வந்தேன். பின்னர் அங்கு வந்த ஆட்டோவில் மாணவியை ஏற்றிக்கொண்டு அரும்பாக்கத்தில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றேன்.

    அதன்பிறகு அங்கிருந்து வேறொரு ஆட்டோவில் மாணவியை அழைத்துக் கொண்டு வடபழனியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றேன். எனது தம்பி கடந்த 6 வருடமாக இஜாஸ் அகமதுவின் ஹார்டுவேர் கடையில் வேலைபார்த்து வந்தான்.

    எனவே மாணவியின் தந்தையிடம் போன் செய்து பணத்தை இஜாஸ் அகமது கடையில் கொடுக்க சொன்னேன். பணம் பெற்றுக்கொண்டதாக எனக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மாணவியை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே விட்டுவிட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதையடுத்து மோசினா பர்வீன், இஜாஸ் அகமது ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் 14-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பால கிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×