search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    மோடி பாராட்டுவது மதசார்பற்ற கொள்கையை குழிதோண்டி புதைக்கும்- கே.எஸ்.அழகிரி

    மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை வளர்ப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிப்பதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்களோடு சகோதர, சகோதரிகளாக வாழ்ந்த பண்டிட்டுகளுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைத் திரித்துக் கூறுகிற வகையில் 'காஷ்மீர் பைல்ஸ்' என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது.

    இந்த திரைப்படத்தின் மூலம் மததுவே‌ஷத்தை வளர்த்து மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே பா.ஜ.க.வின் நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற சமூக ஊடகங்களில் வகுப்புவாத சக்திகள் பண்டிட்டுகள் குறித்து ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்.

    அரைகுறையான உண்மைகளையும், ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும் ஒருதலைபட்சமாகக் காட்சிப்படுத்தி இஸ்லாமியர் மீது வெறுப்பை வளர்க்கும் கொடூர நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் காஷ்மீர் பைல்ஸ்.

    காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கட்டுக்கதைகளைப் பரப்புகிற நோக்கம் கொண்டது என்பதற்கு வரலாற்று ரீதியாக நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தால் பண்டிட் சமூகத்தினர் ஜனவரி முதல் மார்ச் 1990 வரையிலான காலகட்டத்தில் தான் பெருமளவு வெளியேறினர்.

    அப்போது மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி இல்லை. மாநிலத்திலும் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் இல்லை. அப்போது பாரதிய ஜனதா கட்சி ஆதரவைப் பெற்ற பிரதமர் வி.பி. சிங் தலைமையில் ஆட்சி மத்தியில் நடந்து கொண்டிருந்தது. அன்று 85 மக்களவை உறுப்பினர்களுடன் வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.க.வின் தலைவர் அத்வானி பரிந்துரை செய்து மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தான் ஜக்மோகன்.

    ஜக்மோகன் ஒரு தீவிர முஸ்லிம் வெறுப்பாளராகவும், ஆர்.எஸ்.எஸ்., விசுவாசியாகவும் இருந்த காரணத்தால் ஆளுநர் பதவியில் அவர் அமர்த்தப்பட்டார். இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதம் தலைதூக்கி கலவரம் தலைவிரித்தாடியதற்கும், பண்டிட்கள் பெருமளவு வெளியேறுவதற்கும் அடிப்படை காரணமாக இருந்தது அன்றைய ஆளுநர் ஜக்மோகனின் அடக்குமுறை ஆட்சி தான்.

    காலம் காலமாக சகோதர, சகோதரிகளாக ஒன்றிப் பிணைந்து, ஒரே மொழி பேசி உறவாடிய சமூகங்கள் இன்று எதிரும், புதிருமாக நிறுத்துவதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு பா.ஜ.க.வின் மலிவான மதவாத அரசியலே காரணம். பண்டிட்கள் வெளியேற்றத்தின் மூலம் துவே‌ஷத்தை வளர்த்து, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதே காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் நோக்கமாகும். ஆனால், காஷ்மீர் மாநில வரலாற்றை அறிந்தவர்கள் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற நச்சுக் கருத்துகளை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    மத துவே‌ஷத்தை வளர்க்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை தயாரித்த இயக்குநரை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் பாராட்டி ஊக்கப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பற்ற கொள்கையை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதன்மூலம் மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை வளர்ப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×